Tamilnadu

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் : தேசிய அளவில் ட்ரெண்டான #TNEmpowersWomen.. அரசுக்கு குவியும் பாராட்டுகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்ட தொடக்கத்தில் அடையாளமாக 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் 2023 - 24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர். அனைவரது வீட்டில் இருக்கும் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் இன்று ரூ.1000 வந்தடைந்துள்ளது. இந்த அருமையான திட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்களும் பெண்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பால் குடும்ப தலைவிகள் தங்களுக்கு தேவையான சின்ன சின்ன செலவுகளுக்கும் பிறரை நம்பி இருக்க தேவை இருக்காது. அதோடு இந்த பணத்தால் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான சிறு சிறு ஆசைகளையும் நிறைவேற்ற ஏதுவாக இருக்கிறது.

இந்த அருமையான திட்டத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கலைஞர் உரிமைத் திட்டம் தற்போது X சமூக வலைதள பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முன்னிட்டு நேற்று இந்திய அளவில் #TNEmpowersWomen ட்ரெண்டான நிலையில், இன்றும் #TNEmpowersWomen ஹாஸ்டாகும், #கலைஞர்உரிமைத்தொகை1000 ஹாஸ்டாகும் ட்ரெண்டாகி வருகிறது. இந்த அருமையான திட்டத்துக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரலாற்று மிக்க சிறப்பு திட்டமாக அமைகிறது. சொல்வதை செய்துகாட்டும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தங்களுக்கு ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து திமுக அரசு நன்மையே செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்கு இந்த திட்டத்திலும் பிரதிபலிக்கிறது.

Also Read: “மகளிர் நலம் காத்த மாண்பாளர் கலைஞர்தான்.. மகளிர் உரிமைத் திட்டத்தின் நோக்கம் இதுதான்” : முதலமைச்சர் உரை!