Tamilnadu

பெரியார் அண்ணா கலைஞர் கனவுகளை நிறைவேற்றிய மகளிர் உரிமை திட்டம்.. சாதித்துக் காட்டிய திராவிட மாடல் நாயகன்!

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்தது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட தி.மு.க அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வந்தது. மேலும் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம் என தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி காட்டியுள்ளார்.

அதோடு எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மகளிருக்கான ரூ.1000 வழங்கும் அறிவிப்பு தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியானது. அதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படும் என்றும், இத்திட்டத்திற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 24.7.2023 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி இன்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கனவுகளைத் திராவிட மாடல் நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

அதாவது, “பெண்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஊதியம் தேட ஆரம்பித்து விட்டாலே, ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என தந்தை பெரியார் ஆசையையும், “திராவிட இயக்கத்துக்குப் பெண்களையும் உள்ளடக்கிய சமூக விடுதலை என்ற பெருங்கனவு இருக்கிறது” என்ற பேரறிஞர் அண்ணாவின் ஆசையையும், “பெண்கள் ஆண்களின் சொத்து அல்ல; அவர்களுக்கும் குடும்பத்தின் சொத்தில் பங்குண்டு” என்ற முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கனவுகளைக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் நிறைவேற்றியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்து, “பெண்ணினத்தை ஆணுக்குச் சமமாக உயர்த்துவது தான் திராவிட மாடல் அரசு ஆகும். இன்னும் சொன்னால் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப் போல ஆணை விடவும் உயர்ந்தவர்களாகப் பெண்களை உயர்த்துவது தான் திராவிட மாடல் ஆகும். ஏழைத் தாய்மார்களின் குழந்தைகள் இன்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக, ஆசிரியர்களாக வலம் வருவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்தச் சமூகத்தில் வெற்றி பெற்ற ஒவ்வொரு சாதனையாளரின் பின்னாலும் பெண்களின் உழைப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா- தமிழினத் தலைவர் கலைஞர் ஆகிய மூவரும் போட்டுத் தந்த பாதையில் செயல்படும் இந்த திராவிட மாடல் அரசானது, மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாம் கொண்டு வரும் திட்டங்களை இன்று இந்தியாவே உன்னிப்பாகக் கவனிக்கிறது." என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மகளிர் நலம் காத்த மாண்பாளர் கலைஞர்தான்.. மகளிர் உரிமைத் திட்டத்தின் நோக்கம் இதுதான்” : முதலமைச்சர் உரை!