Tamilnadu
இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்: முதலமைச்சர் திட்டவட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.09.2023) சென்னையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-
தங்கப்பாண்டியன் – கலாவதி அவர்களுடைய அருமை மகன் ராமன் அவர்களுக்கும், அருண் – அருள்மொழிஆகியோருடைய அன்பு மகள் அக்ஷய செல்வி அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துக்களோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. இந்த மணவிழாவை பொறுத்தவரையில், நான் கலந்து கொள்ளக்கூடிய ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிகளும், மறக்காமல் வரலாற்றில் பதிவாகியிருக்கக்கூடிய ஒரு செய்தியை சொல்லாமல் இருந்ததில்லை.
இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம் சீர்திருத்த முறையில், சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிறருக்கக்கூடிய திருமணமாக நடந்தேறியிருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால் அந்த திருமணங்கள் சட்டப்படிசெல்லுபடியாகும் என்ற அங்கிகாரத்தை பெறமுடியாத நிலையில் நடந்திருக்கிறது.
ஆனால், 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்று, ஆட்சியின் தலைவனாக, தமிழக முதல்வராக நம்மை ஆளாக்கிய இதயதெய்வம் அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று முதலமைச்சராக பொறுப்பேற்று, முதலமைச்சர் என்ற முறையில் முதன்முதலாக சட்டமன்றத்திற்குள்ளே நுழைந்து சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற தீர்மானத்தை சட்டமாக்கி நிறைவேற்றித் தந்தார்கள். ஆகவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கக்கூடிய இந்தத் திருமணம் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கிகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த திருமணத்தில் உங்களோடு சேர்ந்து நம்முடைய மணமக்களை நானும் வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக நம்முடைய தங்கபாண்டியன் அவர்கள் எந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி ஏதோ நான் சொல்லித்தான் நீங்கள் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இல்லை. ஏனென்றால் அவரை அறிந்தவர்கள் நீங்கள், புரிந்தவர்கள் நீங்கள். தொடக்கக்காலத்தில், ஒரு சாதாரண உறுப்பினராக, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதற்குப் பிறகு பேரூர் கழகச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றி, அதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக பணியாற்றக்கூடிய அந்த வாய்ப்பையும் பெற்று, அதற்குப் பின்னால் 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிடக்கூடிய வாய்ப்பைப் பெற்று, ஆனால் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பை அவரால் பெறமுடியவில்லை. வெற்றி பெறவில்லையே, தோற்றுவிட்டோமே என்று துவண்டுவிடாமல் தொடர்ந்து இயக்கப் பணியாற்றி வெற்றியை, தோல்வியை இரண்டையும் ஒன்றாக கருதி தொடர்ந்து உழைத்த காரணத்தினால்தான் அதற்குப் பிறகு நடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலாக இருந்தாலும் சரி, 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலாக இருந்தாலும் சரி, தொடர்ந்து இரண்டு தேர்தலில் வெற்றி பெற்று இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடியவர்தான் நம்முடைய அருமை சகோதரர் தங்கபாண்டியன் அவர்கள்.
அவரைப்பற்றி இன்னொரு செய்தியை நான் இங்கு பெருமையோடு சொல்லியாகவேண்டும். அவர் எப்பொழுது சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அன்றிலிருந்து இன்றுவரை ஏற்கனவே, 5 ஆண்டாக இருந்தாலும் சரி, அதற்குப்பிறகு இப்போது இரண்டரை ஆண்டு காலத்திற்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி, இதுவரையில் சட்டமன்ற உறுப்பினருடைய சம்பளப் பணத்தை தனக்கு செலவழிக்காமல் தன்னுடைய தொகுதி மக்களுக்காக, அந்த தொகுதியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு, கல்வி உதவிக்கு அதை அவர் செலவு செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.
இதுவரை 234 தொகுதிகளில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களில் தங்கபாண்டியனை போல சம்பளத்தைப் பெறாமல் மக்களுக்காக பணியாற்றக்கூடிய MLA உண்டா? என்றால் நான் உள்பட சொல்லுகிறேன் இல்லையென்றுதான் சொல்லியாகவேண்டும். அந்த அளவிற்கு அவர் மக்களிடத்தில் நல்ல மதிப்பைப் பெற்றிருக்கிறார். மக்களுடைய உள்ளத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றிருக்கக்கூடிய இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமையேற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.
அதுமட்டுமல்ல, கொரோனா என்ற ஒரு கொடிய நோய் தொற்றிய நேரத்தில் இந்தியா மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகமே அதில் சிக்கித் தவித்த நேரத்தில் நம்முடைய தமிழ்நாடும் சிக்கித் தவித்தது என்பதை மறந்திருக்க மாட்டீர்கள். அதில் பல கொடுமைகள் எல்லாம் அனுபவித்தவர்கள் இங்கே இருப்பீர்கள்.
கொரோனா காலத்தில் நடந்த ஆட்சி தமிழ்நாட்டில் அப்போது அதிமுக ஆட்சி. ஆனால் ஆட்சியில் இருந்தார்களே தவிர, அந்த கொரோனாவை கட்டுப்படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டார்களா என்று கேட்டீர்கள் என்றால் ஈடுபடவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியை எந்த அளவிற்று ஆற்றியிருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் அந்த கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு துணை நிற்கக்கூடிய வகையில் ‘ஒன்றிணைவோம் வா’- என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன்மூலமாக மக்களுக்கு என்னென்ன தேவைகள் ஏற்படுகிறதோ அத்தனையும் செய்து கொடுத்த ஒரு கட்சிதான் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.
அதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றோம் என்று சொன்னால், தங்கபாண்டியன் போன்றவர்கள், அவருடைய இராஜபாளையம் தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு அவர் ஆற்றியிருக்கக்கூடிய பணிகள் எல்லாம் தலைமைக் கழகத்தின் மூலமாக நானும் அறிந்தவன், உள்ளபடியே அதற்கான நான் மனம் திறந்த பாராட்டுக்களை இந்த நேரத்தில் தங்கபாண்டியன் அவர்களுக்கு உங்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திமுக-வை பொறுத்தவரைக்கும், ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லையென்று சொன்னாலும் சரி, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற, மக்களைப் பற்றி கவலைப்படுகிற ஒரு கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதாகும். அதனால்தான் தொடர்ந்து வெற்றியை நாம் இன்றைக்கு பெற்று வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய வெற்றி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள். அதற்குப் பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆறாவது முறையாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக்கித் தருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
அந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதற்குப்பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய இடைத்தேர்தல்கள், அந்த இடைத்தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். தொடர்ந்து வெற்றியை பெறுவதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாம் ஆட்சி வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப் போகிறோம் என்று வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை தந்தோம். அந்த அடிப்படையில் அதை நம்பி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள்.
வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அப்படிப்பட்ட உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். இன்னும் சொல்கிறேன். 100-க்கு 99 சதவீதம் இதுவரையில் நாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். மீதம் இருக்கிற 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றக்கூடிய திட்டமாகத்தான் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதையும் நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்படி எத்தனையோ திட்டங்கள் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” மட்டுமல்ல, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு “விடியல் திட்டம்” என்ற பெயரில் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
அதற்குப் பின்னால், “புதுமைப் பெண் திட்டம்” பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் அந்த மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதேபோல், “நான் முதல்வன்” திட்டம். இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய, அவர்களுக்கு பயிற்சியை தரக்கூடிய, அந்தத் திட்டம் இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”. அது காஞ்சிபுரத்தில், அவர் பிறந்த அந்த மண்ணில் அந்தத் திட்டத்தை நான் தான் தொடங்கி வைக்கப் போகிறேன். அப்படி தொடங்கிவைக்கப்படுகின்ற நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், நம்முடைய அமைச்சர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்டு அந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்கள். எவ்வளவு பேர் அந்தத் தொகையை பெற இருக்கிறார்கள் என்று சொன்னால், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் அந்தத் தொகையை வழங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறோம். மாதம் 1000 ரூபாய் வழங்கப்படயிருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எப்படி தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை நீங்கள் எல்லாம் உருவாக்கி தந்தீர்களோ, அதேபோல வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல், விரைவில் குறித்த நேரத்தில் வரப் போகிறதா அல்லது அதற்கு முன்பே வந்துவிடுமா என்ற ஒரு எண்ணம், சந்தேகம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் வந்தாலும், அதில் நாம் தான் 40க்கு 40, புதுவையும் சேர்த்து வெற்றி பெறப்போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சமீபத்தில் கூட இடைத்தேர்தல்கள் நடந்திருக்கிறது. நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்திருக்கிறது. கேரளா – உத்தரபிரதேசம் – மேற்கு வங்கம் – ஜார்கண்ட் என்று இப்படி பலமாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்திருக்கிறது. அப்படி நடைபெற்றிருக்கக்கூடிய இடைத்தேர்தல்களில் “இந்தியா” கூட்டணியில்இருக்கின்ற கட்சிகள் தான் வெற்றி பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அங்கெல்லாம் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, ஒரு சில மாதங்களுக்கு முன்பு, அருகில் இருக்கக்கூடிய கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. அதிலும், பாரதிய ஜனதா கட்சி வீழ்த்தப்பட்டு அங்கே நம்முடைய கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது.
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால் பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த ஏழு ஆண்டுகளில் எங்கெங்கெல்லாம் தேர்தல் நடந்திருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழ்நாடு -கேரளா – பீகார் - மேற்கு வங்கம் – ஜார்கண்ட் – ஒடிசா – சத்தீஸ்கர் -தெலங்கானா – ஆந்திரா – பஞ்சாப் – டெல்லி – ராஜஸ்தான் என்றுஇங்கெல்லாம் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அங்கெல்லாம் நடைபெற்றதேர்தல்களில் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சிதோற்கடிக்கப்பட்டு அங்கெல்லாம் நம்முடைய எதிர்க்கட்சிகளாக இருக்கக்கூடியவர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மக்கள் தயாராகஇருக்கிறார்கள். ஏற்கனவே “இந்தியா” கூட்டணி அமைப்பு ஒன்றுஉருவாக்கப்பட்டிருக்கிறது.
பீகாரில் முதல் கூட்டத்தை நடத்தி,இரண்டாவதாக கர்நாடகாவில் நடத்தி, மூன்றாவதாக மும்பையில் நடத்தி,அந்தக் கூட்டத்தின் மூலமாக பல்வேறு முடிவுகள் எல்லாம்அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி அமைக்கப்பட்டிருக்கக்கூடிய “இந்தியா” கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை நாம் காப்பாற்ற முடியும்.
இந்தியாவை காப்பாற்றியாக வேண்டும் என்று சொன்னால், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். எப்படி சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தீர்களோ, அதேபோல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தீர்களோ, அதேபோல், இந்தியா முழுவதும் அந்த வெற்றியை தேடித் தரவேண்டும். வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் புதுவையை சேர்த்து 40 இடங்களிலும், மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தாருங்கள், தேடித்தாருங்கள் என்று இந்த நேரத்தில் இந்த மணவிழா நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய நம்முடைய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” இருந்து வாழ்ந்திட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, ஒரே ஒரு வேண்டுகோள் தான். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் எந்த குழந்தையாக இருந்தாலும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று ஒரு அன்பான வேண்டுகோளை மாத்திரம், உரிமை கலந்த அந்த வேண்டுகோளை எடுத்து வைத்து மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!