Tamilnadu

“விநாயகரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்..” - இந்து மக்கள் கட்சிக்கு குட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்றம் !

ஆண்டுதோறும் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 17-18 ஆகிய தேதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தமிழ்நாடு அரசும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 13 இடங்கள் மற்றும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலங்களுக்கும் அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக காவல்துறையினரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கு எதிராகவும், விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் அனுமதி கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செயப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுவதாக கூறினார். மேலும், அந்தந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது உள்ளூர் போலிசார் அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் எனவும், ஈரோடு மாவட்டம் அன்னூரில் இருக்கும் நபர் கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கோருவதாகவும் குறிப்பிட்ட வழக்கறிஞர், இதனால் தான் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்து மக்கள் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு அரசின் ஆணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு ஏற்கப்படாது.

மேலும், சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து செல்லும்படி விநாயகர் கூறவில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்? எனவும் காட்டாமாக கேள்வி எழுப்பினார். அதோடு விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக கூறிய நீதிபதி, இவை அனைத்தும் தனது சொந்த கருத்து மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

Also Read: காவிரி : “கர்நாடகா சொல்வதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” - அமைச்சர் துரைமுருகன் அதிரடி!