Tamilnadu
வருமானத்துக்கு அதிகமாக ₹ 2.64 கோடி சொத்து.. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய அதிமுக முன்னாள் MLA !
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்திய நாராயணன். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது இவர் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட நிலையில், தோல்வியடைந்தார்.
இந்த சூழலில் இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் எழுந்தது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சத்திய நாராயணன் சொத்து குவித்ததை கண்டறிந்தனர். அதாவது அவர் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் போது தனது சொத்து பட்டியலை சமர்ப்பித்துள்ளார். அதனை ஆய்வு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்கள் மற்றும் மதிப்பின் விவரத்தை எடுத்துள்ளது.
தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் சத்திய நாராயணன் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 16.33% சொத்துகள் சேர்த்துள்ளது தெரியவந்தது. 2016-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சத்திய நாராயணன் இந்த சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு 3 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 21 சொத்துக்களை வைத்திருந்தார். 2021 ஆம் ஆண்டு 16 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 சொத்துக்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது சத்திய நாராயணனுக்கு சொந்தமான இடங்களான சென்னையில் 16 இடங்களிலும், கோயம்புத்தூரில் ஒரு இடமும், திருவள்ளூரில் ஒரு இடம் என 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு