Tamilnadu

“அண்ணாமலையின் ஒவ்வொரு எழுத்துக்கும் எங்களால் அர்த்தங்களை கொடுக்க முடியும்..” - அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில்களின் சொத்துக்கள் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த புத்தகத்தில் இதுவரை மீட்கப்பட்ட ரூ.1,692 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த விவரங்கள் இருப்பதாக புள்ளி விவரத்துடன் விவரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கிறது. கோயில் சொத்துக்களை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் துறை ஒருபோதும் இல்லை. தவறான கருத்துகளை வலதுசாரிகள் பரப்பி வருகிறார்கள். அமைச்சராக பதவி ஏற்கும் அனைவருக்கும் ஒரே உறுதிமொழி மேற்கொள்வார்கள் என்பதை அண்ணாமலை அறிந்துகொள்ள வேண்டும்.

சட்டத்துக்கு புறம்பாக விதிகளை எந்த இடத்திலும் நான் மீறவில்லை. அண்ணாமலை போன்ற வேலையற்ற வீனர்களின் வீண் வாதங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. சனாதன கருத்துகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சரும் விளக்கி உள்ளார். பெண்களுக்கு எதிரான சமூக நீதி மறுப்பையே நாங்கள் எதிர்க்கிறோம். இந்து மதம் வேறு. சநாதனம் வேறு. நாங்கள் இந்துக்களை ஒருபோதும் எதிர்க்கவில்லை.

அவர்களை போல் எங்களாலும் B- Bad fellow J- Jaundice P- plague என பாஜகவை விமர்சிக்க முடியும். ஆனால் எங்கள் தலைவர்கள் அதுபோல எங்களை வழி நடத்தவில்லை. அண்ணாமலையின் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் எங்களால் ஒவ்வொரு அர்த்தங்களை கற்பிக்க முடியும். ஆனால் நாங்கள் கருத்தை கருத்தால் எதிர்கொள்கிறோம்." என்றார்.

Also Read: எதிர்கால ஆதாரம் : கோயில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்ட முழு விவரம்.. 2வது புத்தகம் வெளியீடு !