Tamilnadu

”மோசடி வழக்கில் நான் தலைமறைவாக இருக்க உதவியவர் எஸ்.பி.வேலுமணி"... போட்டுக் கொடுத்த ராஜேந்திரபாலாஜி!

அ.தி.மு.க ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திராபாலாஜி. அப்போது இவர் ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை பணமோசடி செய்துள்ளார்.

இந்த மோசடி புகார் குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் தம்மை போலிஸார் கைது செய்வது உறுதி என்பதை அறிந்து கொண்ட ராஜேந்திரபாலஜி தலைமறைவானார்.

இவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலிஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். ஆனால் 20 நாட்களுக்கு மேலாக போலிஸாரிடம் சிக்காமல் அங்கும் இங்கும் போக்குக்காட்டி வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு கர்நாடகாவில் காரில் தப்பிச் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை போலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்த பணமோசடி வழக்கு இன்றும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நடந்த அ.தி.மு.க கூட்டம் ஒன்றில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "பண மோசடி வழக்கில் போலிஸார் என்னை கைது செய்யாமல் இருக்க நான் தலைமறைவாக இருந்தபோது என்னைப் பாதுகாத்தவர் எஸ். பி. வேலுமணிதான். அந்த நாட்களில் என்னை எங்கெங்கெல்லாம் எப்படி எல்லாம் அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்தார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை" என கூறியுள்ளார். எஸ்.பி.வேலுமணியை பெருமைப் படுத்திப் பேசுவதாக நினைத்து அவரை காட்டிக் கொடுத்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.

Also Read: ”நாம் அனைவரும் அமைச்சர் உதயநிதியுடன் நிற்க வேண்டும்” .. இயக்குனர் வெற்றிமாறன் ஆதரவு கருத்து!