Tamilnadu

G20 மாநாடு: கடும் கெடுபிடிகள்.. டாக்சி, ஆட்டோ, பேருந்துகள் இயங்க தடை - டெல்லியில் முழு அடைப்பு!

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறது.

ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி கட்டுப்பாட்டு பகுதி ஒன்று, இரண்டு என்றும், ஒழுங்குப்படுத்தப்பட்ட மண்டலம் என்று மூன்று மண்டலங்களாகப் தலைநகர் டெல்லி பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி முதல் பத்தாம் தேதி இரவு 12 மணிவரை டெல்லிக்குள் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 9, 10 தேதிகளில் டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பேருந்துகள் இயங்காது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுடெல்லி பகுதிக்குள் ஏற்கனவே உள்ள வாகனங்களில் உரிய ஆவணங்களை காண்பித்து பயணிகள் செல்லலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு உச்ச நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஓட்டல்களைத் தவிர மற்ற ஓட்டல்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் உணவு வினியோகத்துக்கும் அனுமதி இல்லை. இந்தியா கேட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.

மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை பணிகள் பாதிக்காதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலிஸ் கூறியுள்ளது. டெல்லி அரசின் இத்தகைய நடவடிக்கை அங்குள்ள மக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Also Read: இந்தியாவில் நடைபெறும் G20 மாநாட்டை புறக்கணித்த சீனா.. பின்னணியில் அமெரிக்கா, ஜப்பான்.. முழு விவரம் என்ன ?