Tamilnadu
பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்தல் குழு.. விதிகளுக்கு முரணாக செயல்படும் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம்!
பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கான தேர்தல் குழுவை தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாக அமைத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அது மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது. அதை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன. இவற்றின்படி துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதனை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்.
உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக் கழக சட்டவிதிகளில், ஆளுநர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவினை அமைக்க வழிமுறை இல்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 30.11.2022 அன்றும் முடிவடைந்ததால், தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசு தான் அரசிதழில் வெளியிடும். இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது ஆளுநர் அவர்கள் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும், ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது, மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது.
தெலுங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் 25.04.2022 அன்று நிறைவேற்றப்பட்டு, 28.04.2022 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது நாள்வரையில் மேற்படி மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும்.
இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!