Tamilnadu
பிளாஸ்டிக் கூடையை திறந்த அதிகாரிகள்.. பதறியடித்து ஓடிய பயணிகள்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வாலிபர் ஒருவர் பெரிய பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்து வந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி கூடைக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டனர். இதற்கு அவர் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் இருப்பதாகக் கூறினார். இருப்பினும் சுங்க அதிகாரிகள் கூடையைத் திறந்து பார்த்தபோது, அதில் அரியவகை பாம்பு குட்டிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப் பிரிவு போலிஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலிஸார், சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, அந்த பாம்புக் குட்டிகளை ஆய்வு செய்தனர். மொத்தம் 14 பாம்பு குட்டிகள் இருந்தன. அதில் 12 பாம்பு குட்டிகள், பால் பைத்தான் எனப்படும், ஒருவகை மலைப்பாம்பு குட்டிகள், 2 பாம்பு குட்டிகள், கிங்ஸ் ஸனேக் வகையைச் சேர்ந்தவைகள்.
இந்த பாம்பு குட்டிகளைக் கடத்தி வந்த வாலிபரிடம் விசாரித்தபோது, பாம்பு குட்டிகள், வெளிநாடுகளில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது. இதை வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்தால், இங்கு சில வாரங்கள் வளர்த்து, ஓரளவு பெரியதாக வளர்ந்தவுடன் அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுவேன். பணக்காரர்கள் தங்களது பங்களாக்களில், மீன் தொட்டிகள் வைத்து வளர்ப்பது போல், இந்தப் பாம்பு குட்டிகளையும், தொட்டிகளில் வைத்து வளர்க்கின்றனர் என்பதைக் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அதோடு இந்த 14 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும், மீண்டும் நாளை சென்னையிலிருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும், தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில், திருப்பி அனுப்பவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!