Tamilnadu

சனாதனம் : “பூச்சாண்டிக்கெல்லாம் திராவிட இயக்கத்தின் ரத்தம் பயப்படாது..” - பாஜகவுக்கு கி.வீரமணி பதிலடி !

ஸநாதனத்தை அழிக்கவேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் (2.9.2023) நடைபெற்ற ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் ஆற்றிய உரையைத் திரித்துப் பிரச்சாரம் செய்யும், சமூக வலைதளங்களில் திசை திருப்பும் வகையில் பதிவிடும் - நீதிமன்றத்திற்குச் செல்லும் பேர்வழிகளுக்குப் பதிலடி கொடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

"திடீரென்று நாடாளுமன்றத்தின் சிறப்புத் தொடர் கூட்டம் வரும் 18.9.2023 அன்று முதல் 22 ஆம் தேதிவரை - ஐந்து நாள்கள் நடைபெறும் என்ற அறிவிப்பு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது. கிலியடித்துள்ளது பா.ஜ.க.விற்கு!

2.9.2023 அன்று சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஸநாதன அழிப்பு மாநாட்டை நான் தொடங்கி வைத்து உரையாற்றிய பின்னர், தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

அவரின் பொறுப்பான, சிறப்பான உரை ஒலி நாடாக்களிலும், காட்சிப் பதிவாகவும் பதிவாகியுள்ளதோடு, ‘முரசொலி’, ‘விடுதலை’ நாளேடுகளில் முழுமையாகவும் அப்படியே வெளிவந்துள்ளது.

மானமிகு உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?

அவர் ஏதோ இனப்படுகொலை (Genocide) செய்யச் சொன்னதுபோல, பல சமூக ஊடகங்களாலும், நாட்டின் பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களாலும் திட்டமிட்டு திரித்துப் பரப்பப்பட்டு வருவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது; அந்தப்படி பரப்பு அப்பட்டமான ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பச்சைப் பொய் மூட்டை’ ஆகும்!

திரிபுவாதம் பா.ஜ.க.வுக்குக் கைவந்த கலை :

இது பா.ஜ.க.வினருக்குக் கைவந்த கலையே! பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று வட இந்தியாவில் ஓர் அவதூறுப் புயலைக் கிளப்பிவிடவில்லையா? அந்த நபர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுண்டே! அவர் ஜாமீன் கோரியபோது, நீதிமன்றங்களே இதுபோன்ற அவதூறு பொய் மூட்டைகளைத் தயாரிக்கும் போக்கைக் குறிப்பிட்டு, கண்டித்த வரலாறு சில மாதங்களுக்குமுன் நடந்தது மறந்தா போகும்?

கருத்தைக் கருத்தால் சந்தித்துக் களமாடுவதுதான் கழகங்களின் பணியே தவிர, வன்முறை வெறுப்புக் காரியத்தில் மக்களை இழுத்துவிடுவதல்ல! எதிர்க்கட்சிகளின் எழுத்துகளை, உரைகளை வெட்டியும், ஒட்டியும் (Out of Content) பொருந்தாதவையை பொருந்த வைத்து, விஷமதானம் செய்வது பா.ஜ.க.வின் அன்றாட திரிபு வேலை.

அதற்குத்தான் பலரை ஒரு பட்டாளமாக திரட்டி பணி செய்ய வைத்து, உண்மைகளை களப் பலியாக்கி, அதில் வெற்றி காணலாம் என்பது காவிகளின் சர்வ சாதாரணமான தினப் பணியே! அதுபோலவேதான் அமைச்சர் உதயநிதிப் பேச்சின்மீதான திரிபுவாதம்! இதுமாதிரி பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவது திராவிட இயக்கத்தின் ரத்த ஓட்டத்தில் என்றுமே கிடையாது!

எதிர்கொள்ளத் தயார்! :

உண்மையை உலகத்திற்கு உணர்த்தி எந்த நிலையையும் எதிர்கொள்ளப் பின்வாங்காதவர்கள் நாங்கள்!. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் வந்த பிறகும்கூட, எப்படியெல்லாம் மீண்டும் மீண்டும் அதை ஏற்காமல், ‘பொய் நெல்லைக் குத்தி பொங்கலிட்டு’ சாப்பிட்டு மகிழ ‘அவாள்’ ஆயத்தமாகிறார்கள்! இது ஸநாதனப் புத்தி அல்லவா! இந்தக் கோயபெல்சின் குருநாதர்களை மக்கள் நன்கு புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

வன்முறைக்குச் சொந்தக்காரர்கள் யார்? :

தங்களுக்கு எதிரான மார்க்கத்தைப் பரப்பிய - மனித சமத்துவத்தை வலியுறுத்திய பிறப்பின் அடிப்படையிலான வருண பேதத்தை எதிர்த்த பவுத்தர்களைக் கொன்று குவித்தவர்கள் யார்? எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றவர்கள் யார்? இத்தகைய கூட்டம்தான் மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொல்லாததை சொன்னதாகச் சொல்லி, மதவாத நெருப்பை மூட்டி, வட மாநிலங்களில் தேர்தலில் ஆதாய வடை சுட முயலுகிறார்கள்.

பேதத்தை ஒழிப்பது குற்றமா? :

ஜாதி ஒழிப்பு என்றால் ஜாதிக்காரர்களைக் கொல்லுவது என்று பொருளாகுமா? மூடநம்பிக்கை ஒழிப்பு என்றால், மூடநம்பிக்கையாளர்களை சாகடிப்பது என்று பொருளாகுமா? ஏழ்மை ஒழிப்பு என்றால், செல்வந்தர்களைத் தீர்த்துக் கட்டுவது என்று பொருளாகுமா?

அதேபோல், ஸநாதன அழிப்பு என்றால், பிறப்பில் பேதம் பேசும் வருணாசிரம தர்மத்தை ஒழிப்பது என்று பொருள் - சமதர்மத்தை - சமத்துவத்தை வளர்ப்பது என்று பொருள். ஆளைக் கொல்லுவதல்ல. பேதத்தை ஒழிக்கும் கருத்தின் அடிப்படையில்தான் மானமிகு உதயநிதி ஸ்டாலின் பேசினார். தேர்தலில் மக்களைச் சந்திக்கக் கைவசம் வேறு சரக்கு இல்லாதவர்கள், திரிபுவாத - மதவாத ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்கள். அந்தோ பரிதாபம்!

மக்கள் அடையாளம் காணட்டும்! :

450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலத்தை அயோத்தியில் இடித்தவர்கள், இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே இராமன் கோவில் கட்டுபவர்கள்தான் மானமிகு உதயநிதி ஸ்டாலினின் அறிவார்ந்த சமத்துவக் கொள்கைப் பிரகடனத்தை வன்முறைப் பேச்சாக திசை திருப்புகிறார்கள், திரிக்கிறார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி பிரார்த்தனைக் கூட்டத்தில் ‘தேசப்பிதா’ காந்தியாரைக் கும்பிட்டுக் கொண்டேசுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சேவை இன்றும் பாராட்டி வழிபடுவோர் யார் என்பது உலகறிந்ததே!

மக்கள் இவர்களை அடையாளம் காண்பார்களாக! :

சென்னையில் 2.9.2023 அன்று ஓர் அரங்கத்திற்குள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய சிறப்புரையை அகில இந்தியாவிலும், அதற்கப்பாலும் பரப்பி, அவர் சரியான ஆதாரப்பூர்வ விளக்கம் தந்த பிறகும், நீங்கள் ஸநாதன முகங்காட்டி ஆடுவது தொடரட்டும்; திராவிட வயலுக்கு அதைவிட நல்ல உரம் வேறு இல்லை.

சந்திக்கத் தயார் என்று அந்த வேங்கைகளின் கொள்கை வாரிசு அதை எதிர்கொண்ட முறை, அவர் வெறும் வாரிசு அல்ல; கொள்கையில் புடம்போட்டு ஜொலிக்கும் திராவிடப் பாசறையின் புதிய வளரும் நம்பிக்கை நாயகன் என்று காட்ட ஒரு வாய்ப்பளித்த உள்துறை அமைச்சகம் தொடங்கி, கடைசி காவிகள்வரை எமது நன்றி! நன்றி!! நன்றி!!!

‘‘‘ஈரோடு போனவர்கள் என்றும் நீரோடு போகமாட்டார்கள்; எதிர்நீச்சல் எங்கள் ஆற்றல் - வெற்றி பலம் காட்டும் வாடிக்கை’’ என்ற கலைஞரின் திராவிடப் பாரம்பரிய எங்கள் வேங்கைகளை வெளிச்சத்திற்குக் காட்டுபவர்களே, தொடரட்டும் உங்கள் தூற்றல்! வீழட்டும் ஸநாதனம்!

Also Read: “சனாதனம் பற்றி அவர்களே இப்படிதான் சொல்கிறார்கள்..” : பா.ஜ.க கும்பலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!