Tamilnadu
குவியல் குவியலாக குப்பையில் கொட்டப்பட்ட ஆதார், பான் கார்டுகள்.. சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி !
சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வருகை பகுதி,ஆறாவது வாசல் அருகே, குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில், நேற்று காலை குவியல், குவியலாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள், மற்றும் அடையாள அட்டைகள் போன்றவைகள் மொத்தமாக கொட்டப்பட்டு கிடந்தன.
இதைப் பார்த்து அங்கிருந்த விமான பயணிகள், பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த பொதுமக்கள் ஆகியோருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை அடுத்து சிலர் அந்த ஆதார், பான் கார்டுகளை ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவர்கள் தடுத்தனர். மேலும் இவைகளை விமான நிலைய ஊழியர்கள் தான் வந்து கொட்டி இருக்கின்றனர். அவர்கள் வந்து அள்ளி சென்று விடுவார்கள் என்று கூறினர்.
இது குறித்து பேசிய சென்னை விமான நிலைய அதிகாரிகள், "சென்னை விமான நிலையத்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே பயணிகள் கொண்டு வரும் ஆதார் கார்டுகளை, சிலர் தவறுதலாக விட்டு செல்கின்றனர். சில பயணிகள் கைகளில் இருந்து தவறி கீழே விழுந்து விடுகின்றன. இதைப்போல் கேட்பாரற்று விமான நிலையத்திற்குள் கிடக்கும், கார்டுகளை விமான நிலைய ஊழியர்கள் எடுத்து வந்து, விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைப்பார்கள்.
அங்கு குறிப்பிட்ட காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும். கார்டுகளை தவறவிட்டவர்கள் வந்து, பெற்று செல்வார்கள். ஆனால் நீண்ட காலமாக யாரும் வராமல் தேங்கி கிடக்கும், கார்டுகளை இதைப்போல் குப்பைகளோடு சேர்த்து விடுகிறோம்.இந்த கார்டுகளை முன்பு அஞ்சல் துறை மூலம், கார்டுகளில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன. ஆனால் தற்போது கார்டுகளை தவறவிட்டவர்கள், இணையதளம் மூலமாக, புதிய ஆதார் கார்டுகள் டவுன்லோட் செய்து கொள்கின்றனர். எனவே காடுகளை தவற விட்டவர்கள் மீண்டும் வந்து, கார்டுகளை கேட்பதும் இல்லை.
அதைப்போல் அஞ்சல் துறையும் முன்பு போல், இந்த கார்டுகளை திருப்பி அனுப்புவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. எனவேதான் வேறு வழி இல்லாமல், இதைப்போல் குப்பையில் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது" என்று கூறியுள்ளனர். ஆதார்,பான் கார்டுகளின் எண்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவைகளை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள், தவறுகள், மோசடிகள் நடக்கும் நிலையில், பயணிகள் விட்டுச் சென்ற ஆதார், பான் கார்டுகளை, இதைப்போல் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!