Tamilnadu

அரசு பள்ளி மாணவி To ஆதித்யா L1 இயக்குநர்.. இஸ்ரோவில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்: யார் இந்த நிகர்ஷாஜி?

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி குறித்த ஆய்வுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆய்வுகளுக்கு முக்கிய புள்ளிகளாக தமிழர்கள் இருந்து வருகின்றனர். சந்திரயான் திட்டங்களில் தமிழர்கள் இருந்து வந்த நிலையில், தற்போது ஆதித்யா எல்1 திட்டத்திலும் இயக்குநராக ஒரு தமிழர் இருக்கிறார். அவர்தான் நிகர்ஷாஜி (Nikarshaji).

சூரியனை குறித்து ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ நீண்ட நாள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து 'ஆதித்யா எல் 1' (ADITYA - L1) என்று பெயரிட்டுள்ள விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது இஸ்ரோ. அதன்படி இந்த விண்கலம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி (நாளை) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 (PSLV-C57) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இந்த ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தென்காசியை சேர்ந்த பெண் இருக்கிறார். அவர்தான் நிகர்ஷாஜி (Nikarshaji). செங்கோட்டையில் உள்ள எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், 1978 - 79ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்தார். அப்போதே 500-க்கு 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக சாதனை படைத்தார்.

படிப்பில் தீராத காதலால் அந்த காலத்திலே 12-ம் வகுப்பு படித்தார். 1200-க்கு 1008 மதிப்பெண்கள் பெற்று மீண்டும் பள்ளியின் முதல் மாணவியாக சாதனை படைத்தார். தொடர்ந்து தனது படிப்பை மேலும் தொடர எண்ணிய இவர், திருநெல்வேலியில் அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து 1982 முதல் 1986 வரை பயின்று தனது பட்டப்படிப்பை முடித்தார்.

பின்னர் பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர்ந்த இவர், 1987- ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து தனது ஆர்வத்தினால் பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் நிகர் ஷாஜி சென்றுள்ளார்.

இந்த சூழலில் இஸ்ரோவில் அவர் சேர்ந்து சுமார் 36 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் தற்போது இஸ்ரோவில் முக்கிய பணியின் திட்ட இயக்குநராக இருந்து வருவது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிகர்ஷாஜிக்கு சகோதரர்கள் இருக்கும் நிலையில், அண்ணன், ஷேக் சலீம், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது தங்கை ஆஷா என்பவர் கேரளாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நிகர்ஷாஜியின் கணவர் துபாயில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மகன் முகம்மது தாரிக் நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். மகள், தஸ்நீம் பெங்களூரில் மருத்துவம் பயின்று வருகிறார். தற்போது நிகர்ஷாஜி தனது குடும்பத்தோடு பெங்களுருவில் வசித்து வருகிறார்.

முன்னதாக நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை துவக்கியபோது, அதன் திட்ட இயக்குநராக கோயம்பத்தூரை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை என்பவர் இருந்தார். அப்போது சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது.

தொடர்ந்து சந்திரயான்-2 திட்ட இயக்குநராக வனிதா முத்தையா இருந்தபோது திட்டத்தின் இறுதி பகுதி வரை வெற்றி கரமாக இயங்கிய போதிலும் கடைசி கட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. இருப்பினும் முயர்சியை விடாமல் 3-வது முறையாக நிலவுக்கு சந்திரயான் 3 அனுப்பபட்டுள்ளது.

சந்திரயான் 3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேல் இருக்கிறார். இவரும் அரசுப் பள்ளியில் பயின்றவர் ஆவார். இந்த சூழலில் தற்போது ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குநராக மீண்டும் அரசுப்பள்ளியில் பயின்ற ஒரு தமிழர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சூரியனை ஆய்வு செய்யவுள்ள ADITYA - L1 விண்கலம்.. அதன் பணிகள் என்ன ? - இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்