Tamilnadu

தினமலர் நாளிதழை கொளுத்திய மாணவர்கள்.. - காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தியதற்கு குவியும் கண்டனம் !

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி 110-ன் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகத்தான திட்டத்தை நாடு முழுவதும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆங்கில பத்திரிகைகள் கூடு தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில் இன்று தினமலர் நாளிதழ் ஈரோடு - சேலம் பதிப்பில் தனது தலைப்பு செய்தியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக தலைப்பு செய்திகள் வெளியிட்டிருந்தது. அந்த செய்திக்கு தற்போது தமிழ்நாடு மக்களிடம் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. முன்னதாக தமிழ்நாடு மக்களின் நலனுக்காக திமுக அரசு கொண்டு வரும் அநேக திட்டங்களை தினமலர் நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

ஆனால் தற்போது குழந்தைகள் நலனுக்காக உணவு விஷயத்தில் தினமலர் வெளியிட்டுள்ள செய்தி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. இதனால் தினமலருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் சேலம் 'தினமலர்' அலுவலகம் முன்பு திமுகவை சேர்ந்த பல்வேறு அணியினர் 'தினமலர்' நாளிதழை கிழித்தும் எரித்தும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுபோல் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தினமலருக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலரை கண்டித்து, நாளிதழை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தினர்.

Also Read: “இப்பவே இப்படி என்றால் 100 ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்?”: தினமலருக்கு முதலமைச்சர் கண்டனம்