Tamilnadu
செந்தில்பாலாஜி வழக்கு ரகசிய விசாரணையா? : “செய்தியாளர்களை அனுமதிக்க முடியாது” - கோபத்துடன் சொன்ன நீதிபதி!
அமலாக்கத் துறை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணத்தை, சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு 5 நாள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத் துறை, ஆகஸ்ட் 12ஆம் தேதி 124 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 3 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான ஆவணங்களை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதையடுத்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ரவி, குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை ஆகஸ்ட் 28ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்த செந்தில்பாலாஜியிடம் வழங்கியதுடன், அவரது நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
அதேசமயம் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜியின் மனுவை அமலாக்கத்துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார்.
இதன்படி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பட்டியலிடப்படாததால், முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் இன்று முறையிடப்பட்டது. அப்போது நீதிபதி, ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவித்துவிட்டார்.
உடனடியாக எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணிகுமார் ஆகியோர் நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர்.
ஆனால் நீதிபதி, அமலாக்கத் துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தி உள்ளார்.இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாட உள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு ரகசிய விசாரணையா?
இன்று செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கோரி முறையீடு செய்ய எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணிகுமார் ஆகியோர் நீதிபதி ரவி முன்பு முறையிட்ட போது, செய்தியாளர்கள் யாரும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், முறையீடு முடிந்த பிறகு மேற்கொண்டு இந்த நீதிமன்றத்தில் நடைபெற உள்ள இந்த வழக்கின் விசாரணைகளை நேரில் காண அனுமதிக்கக்கோரி செய்தியாளர்கள் நீதிபதி ரவியிடம் அனுமதி கேட்டனர். ஆனால், யாரையும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி உடனடியாக நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற வேண்டும் என கோபத்துடன் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!