Tamilnadu
”மேலும் வலுப்பெறும் இந்தியா கூட்டணி”: செய்தியாளர்கள் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன நச் பதில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.08.2023) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் மின்மாற்றி இருக்குமிடத்தைச் சுற்றி பாதுகாப்பினை ஏற்படுத்தும் வகையில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் ரூ.18.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள், நீர்வளத்துறையின் சார்பில் ரூ.91.36 கோடி மதிப்பீட்டில் தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணி மற்றும் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மின்மாற்றியினைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தல்
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ், 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எஸ்.ஆர்.பி.கோயில் வடக்கு பிரதான சாலை மற்றும் தெற்கு பிரதான சாலை, ஜவஹர் நகர் முதல் பிரதான சாலை ஆகிய மூன்று இடங்களில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் மின்மாற்றி இருக்குமிடத்தைச் சுற்றி பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எஸ்.ஆர்.பி. கோயில் வடக்கு பிரதான சாலையில் மின்மாற்றியினைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தல்
கொளத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், 15 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்லவன் சாலையில் பெரியார் நகர், ஜவஹர் நகர் மற்றும் ஜி.கே.எம். காலனி ஆகிய பகுதிகளுக்கு 1110 மீட்டர் நீளத்திலும், 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எஸ்.ஆர்.பி.கோயில் (வடக்கு), ராமமூர்த்தி காலனியிலிருந்து பல்லவன் சாலை வரை 175 மீட்டர் நீளத்திலும்,
1 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டாள் அவென்யூ பகுதியிலிருந்து பல்லவன் சாலை வரை 465 மீட்டர் நீளத்திலும், என மொத்தம் 18 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,750 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்
வி.வி. நகர் 2-வது தெரு பூங்காவில் 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பூம்புகார் நகர் 4-வது தெரு பூங்காவில் 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரியார் நகர் 29-வது தெரு பூங்காவில் 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவஹர் நகர் 5-வது பிரதான சாலை பூங்காவில் 28 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், செல்வி நகர் 5-வது தெரு விளையாட்டு மைதானத்தில் 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 1 கோடியே 9 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பூங்காக்கள் மற்றும் 1 விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் 5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கும் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இப்பூங்காக்களில் 5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படுவதுடன், பசுமையான செடிகள், புல்வெளிகள், சுற்றுச்சுவர், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர்வசதி, பாதுகாவலர் அறை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்படும்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை பார்வையிட்டார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் மாணவ, மாணவியர்களுக்கு TALLY பயிற்சி வகுப்புகள், பெண்களுக்கு தையற் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
கொளத்தூர், ஹரிதாஸ் சாலையில் உள்ள தாமரைக் குளம் பூங்காவை பார்வையிட்டார் கொளத்தூர், ஹரிதாஸ் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தாமரைக் குளம் பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிகள் மற்றும் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல்
நீர்வளத்துறையின் சார்பில் 91 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை - மாதவரம் மற்றும் அயனாவரம் வட்டங்களில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிகள் மற்றும் கொளத்தூர், நேர்மை நகரில்
2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 758.10 சதுர மீட்டர் பரப்பளவில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அளித்த பதில்
கேள்வி : இந்தியா கூட்டணி 28 கட்சிகளுடன் உயர்ந்திருக்கிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர் அவர்களின் பதில் : அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி : கேஸ் விலை குறைப்பு, இந்தியா கூட்டணிக்கான நெருக்கடியா?
முதலமைச்சர் அவர்களின் பதில் : இல்லை, இல்லை, அது தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி.
கேள்வி: பெட்ரோல், டீசல் விலை கூட குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
முதலமைச்சர் அவர்களின் பதில் : ஆச்சரியமில்லை!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!