Tamilnadu

“விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் குலக்கல்வி.. ராஜாஜியை போல் மோடி அரசு ஆட்சியை இழக்கும்”: கி.வீரமணி விளாசல்!

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, “விஸ்வகர்மா யோஜானா திட்டம் என்ற பெயரில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் கொள்கையாக இருக்ககூடிய வர்ணாசிரம தர்மத்தை நோக்கி அனைவரும் வர வேண்டும் என்ற நோக்கில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாகவும் விஸ்வகர்மா யோஜானா திட்டத்தை கைவிட வேண்டும்.

விஸ்வகர்மா யோஜானா திட்டத்தால் 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை சாதி தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். விஸ்வகர்மா யோஜானா திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னையில் 6ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னை மாநில முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததால் ஆட்சியை இழந்தார். இதைப்போல் விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் பாஜக அரசும் விரைவில் ஆட்சியை இழக்கும்” என்று தெரிவித்தார்.

Also Read: “படிக்காதே என்றது சனாதனம்; பசியைப் போக்கி ‘படி படி’ என்பது திராவிட மாடல் அரசு..” - கி.வீரமணி அறிக்கை !