Tamilnadu
”பசிப் பிணியை போக்கும் கருணை திட்டம்”: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தினத்தந்தி பாராட்டு!
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார், வள்ளலார். அதுபோல, இளந்தளிர்கள் பசியால் வாடி நின்றபோதெல்லாம் நமது தலைவர்களின் உள்ளத்தில் கருணை பெருக்கெடுத்து ஓடி, அவர்களின் பசியை போக்கும் திட்டங்கள் உருவாகின. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியிலுள்ள ரெயில்வே கேட் மூடியிருந்ததால், அந்த வழியே சுற்றுப்பயணம் சென்ற காமராஜர், காரை விட்டு இறங்கி நின்ற நேரத்தில், மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை பார்த்து, "நீ ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை?" என்று கேட்டிருக்கிறார். தன்னிடம் பேசுவது முதல்-அமைச்சர் என்பதை அறியாத அந்த சிறுவன், "பள்ளிக்கூடத்துக்கு போனால் யார் சோறு போடுவார்கள்?'' என்று கூறியிருக்கிறான். "சோறு போட்டால் பள்ளிக்கூடம் போவாயா?" என்று காமராஜர் கேட்க, "போவேனே" என்று உற்சாகமாக அந்த சிறுவன் அளித்த பதில்தான், காமராஜர் உள்ளத்தில் மதிய உணவு திட்டம் தோன்றி செயல்பட வைத்தது. அதற்கு துணை நின்றவர், பெரியாரின் பெருந்தொண்டராக இருந்த பொதுக்கல்வி இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு.
அதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆர். அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள சென்றபோது, சில மாணவிகள் சோர்வாக இருந்ததைப்பார்த்து, "காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?" என்று கேட்ட நேரத்தில், பெரும்பாலானவர்கள், "நாங்கள் சாப்பிடவில்லை" என்றும், "எங்கள் வீட்டில் சமையல் செய்யவில்லை" என்று ஒரு மாணவியும், "மதியம் பள்ளிக்கூடத்தில் சாப்பிடு" என்று தாயார் சொன்னதாக ஒரு மாணவியும், "காலையில் டீ மட்டும் குடித்துவிட்டு வந்தேன்" என்ற மற்றொரு மாணவியின் பதிலும் அவருடைய உள்ளத்தை உருக்கியதன் காரணமாக, அவருடைய சிந்தையில் உதித்ததுதான் காலை உணவு திட்டம். அதாவது, செவிக்கு உணவு அளிக்கும் முன்பே வயிற்றுக்கு உணவு அளித்துவிட முடிவு செய்தார்.
முதலாவதாக, 15-9-2022 அன்று அண்ணா பிறந்தநாளில் இந்த திட்டத்தை மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் தொடங்கிவைத்தார். முதல் கட்டமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1,545 பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்பு 28-2-2023 அன்று இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு, 1,005 நகர்ப்புற மையங்களில் 1,12,883 மாணவர்களுக்கும், 963 கிராமப்புற மையங்களில் 41,225 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாட்டிலுள்ள 31,008 அரசு பள்ளிக்கூடங்களிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவளிக்கும் திட்டத்தை கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில், அவர் படித்த பள்ளிக்கூடத்தில் நேற்று தொடங்கிவைத்து, மாணவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டார்.
அரசு பள்ளிக்கூடங்களில் தொடக்கக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இனி பசிப்பிணி இல்லை. காலையும், மதியமும் பள்ளிக்கூடத்திலேயே சாப்பிட்டுவிடலாம். அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த மருத்துவம், என்ஜினீயரிங் உள்பட தொழிற்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. உயர்கல்வி பெறும் அரசு பள்ளிக்கூட மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த மாதம் ரூ.1,000 பெறும் 'புதுமைப்பெண்' திட்டம் இருக்கிறது. எனவே, நான் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன் என்று மாணவர்கள் நெஞ்சை நிமிர்த்தி பெருமையோடு சொல்ல முடியும். காலை உணவு திட்டம் பசிப் பிணியை போக்கும் ஒரு கருணை திட்டம்.
- தினத்தந்தி தலையங்கம் (26-08-2023)
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!