Tamilnadu

மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயிலில் தீ.. 10 ஆன்மீக சுற்றுலா பயணிகள் உடல்கருகி பரிதாப பலி!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலாவுக்கு பயணிகள் சுற்றுலா இரயிலில் பயணித்து வந்தனர். ஆகஸ்ட் 17-ம் தேதி கிளம்பிய பயணிகள் தென் மாநிலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்த சூழலில் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

காலை அனைவருக்கு டீ போட வேண்டும் என்று இரயிலில் இருக்கும் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தியபோது, அது வெடித்து பேட்டி ஒன்றில் தீ பற்றியுள்ளது. சுமார் 5.20 மணியளவில் பற்றிக்கொண்ட அந்த தீ தொடர்ந்து அடுத்தடுத்த பெட்டிகளில் பரவ, தீ மளமளவென பற்றத்தொடங்கியுள்ளது. இவ்வாறு அனைத்து பெட்டிகளில் தீ பரவவே அதில் சிக்கி பயணிகள் பெரும் அவதிக்குள்ளானர்.

தொடர்ந்து இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள் விரைந்து வந்து காலை 7 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்ப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 10 மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி நேரில் ஆய்வு செய்து வருகிறார். தீ விபத்துக்கான காரணம் சிலிண்டர் வெடிப்பு என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை அறிந்து தெற்கு இரயில்வே அதிகாரிகள் மதுரைக்கு விரைகின்றனர்

தொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியளித்தும் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. ஆன்மீக சுற்றுலாவுக்கு வந்த உத்தர பிரதேச பயணிகள் 10 பேர் இரயில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இந்தியாவின் சாதனையை விமர்சித்த பிரிட்டன் செய்தி வாசிப்பாளர்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்.. நடந்தது என்ன ?