Tamilnadu
31,008 பள்ளிகள்.. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடக்கம்: 17 லட்சம் மாணவர்கள் பயன்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
“நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.9.2022 அன்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.
முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். மேலும், 28.02.2023 முதல் இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயலியின் படி 1,005 நகர்ப்புற மையங்களில் 1,12,883 குழந்தைகளும், 963 கிராமப்புற மையங்களில் 41,225 குழந்தைகளும் பயனடைந்து வருகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள்கள்
மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் செயல்படுத்தும் முறை
பெருநகர சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள் மூலம் பள்ளி சத்துணவு மையங்களை இணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சி மற்றும் மலைப் பகுதி மையங்களில் இத்திட்டம் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி / சுய உதவிக் குழு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பெரும்பாலான பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட அரசு முடிவு செய்துள்ளது என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 13.1.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக, 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’ என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், ரூ.404.41 கோடி செலவில் 31,008 பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை விரிவுப்படுத்தி தொடங்கி வைக்கும் விதமாக திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று உணவு பரிமாறி, அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு
திங்கள் கிழமை - காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா / சேமியா உப்புமா / அரிசி உப்புமா / கோதுமை ரவை உப்புமா; செவ்வாய் கிழமை – காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி / சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி; புதன்கிழமை – காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல் / வெண் பொங்கல்; வியாழக்கிழமை – காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா / ரவா உப்புமா / கோதுமை ரவை உப்புமா; வெள்ளிக்கிழமை – காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / ரவா காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை / கோதுமை ரவை / சேமியா. மேலும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?