Tamilnadu
காலை உணவுத் திட்டத்தின் 5 நோக்கம் இதுதான்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன விளக்கம் என்ன?
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்து வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'வாழ்விலோர் பொன்னாள்' என்று சொல்கின்ற வகையில், இந்த நாள் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதைவிடச் சிறப்பு என்னவென்றால்? இந்த இடம்! இந்த ஊர்! இந்த திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன், தமிழ்நாடு முழுமைக்கும் ஒளி வீசியது. ஏன், இந்தியாவோட தலைநகர் வரை அதனுடைய வெளிச்சம் பரவியது. அந்த சூரியனுடைய பேர்தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய நம் தமிழினத் தலைவர் கலைஞர் படித்த தொடக்கப் பள்ளியில் இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
தமிழ்நாட்டோட முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், இந்த காலை உணவுத் திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது. இன்னும் சொல்லவேண்டும் என்றால், படிப்புக்காகவும், வேலைக்காகவும் பேருந்தில் செல்லும் நம்முடைய சகோதரிகள், கட்டணமில்லாமல் ‘விடியல் பயணத்தை’ மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசுப் பள்ளி மாணவிகள் ’புதுமைப் பெண்’ திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறும் போதும், அவர்களை விட எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படும். ஏனென்றால், பலருடைய மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருக்கிறேன் என்ற அந்த உணர்வில் அப்படி பெருமகிழ்ச்சி உண்டாகும்.
கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், மதுரை ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். மாணவச் செல்வங்களுக்கு காலை உணவு பரிமாறினேன். அவர்களோடு உட்கார்ந்து உணவு சாப்பிட்டேன். இப்போதும் இங்கே தொடங்கிய திருக்குவளைப் பள்ளியில், கலைஞர் படித்த பள்ளியில் தொடங்கியபோது, அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டுதான் வந்திருக்கிறேன்.
மதுரையில் நான் தொடங்கினேன். அன்றைய நாளிலிருந்து, 1 இலட்சத்து 14 ஆயிரம் பிள்ளைகளுக்கு காலை உணவு தரப்பட்டது. அதை மேலும் விரிவுபடுத்தும் நம் எண்ணம் தான் இன்றைக்கு செயல்வடிவமாகி, 17 இலட்சம் பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று மணிமேகலை காப்பியம் சொன்னபடி, உயிர் கொடுக்குற அரசாக, நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
இந்தியாவிலேயே புதுப்புது திட்டங்களைக் கொண்டு வந்து, முன்னோடி மாநிலமாக இருப்பதில் நம்பர் ஒன் மாநிலம்- நம்முடைய தமிழ்நாடு தான். அதில் மிகமிக முக்கியமான இந்த ‘காலை உணவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
ஒன்று, மாணவர்கள் பசியில்லாமல் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும்.
இரண்டு, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் அந்தக் குழந்தைகள் இருக்க வேண்டும்.
மூன்று, இரத்த சோகை என்ற குறைபாட்டை நீக்கவேண்டும்.
நான்கு, மாணவர்களுடைய வருகை பதிவை அதிகரிக்க வேண்டும்.
ஐந்து, வேலைக்குப் செல்கின்ற தாய்மார்களோட பணிச்சுமைய குறைக்க வேண்டும்.
இந்த ஐந்து நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான் நம்முடைய இலட்சியம். முழுமையாக அடைந்தே தீருவோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
பசிப்பிணி நீங்கிட்டால், மனநிறைவோடு பிள்ளைகள் படிப்பார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதியும். பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவார்கள். சீரான வருகைப் பதிவும் இருக்கும். தமிழ்நாட்டின் கல்வி விகிதமும் அதிகம் ஆகும். தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் அறிவாற்றல் பொருந்தியவர்களாக உயர்வார்கள். படிப்புடன் விளையாட்டு, கலைத்திறன் ஆகியவற்றிலும் சாதனை படைக்கக் கூடியவர்களாக நிச்சயம் திகழ்வார்கள். இப்படி எத்தனையோ நன்மைகளை நம்முடைய மாநிலம் இந்தத் திட்டத்தால் அடையப் போகின்றது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!