Tamilnadu

உலகின் 31-வது பெரிய நகரம்; பழமையும், புதுமையும் கலந்த நம்ம சென்னைக்கு இன்று 384-வது பிறந்தநாள்!

சென்னைக்கு இன்று 384-வது பிறந்த நாள்!

கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் திகழும் சென்னை.

உலகின் 31-வது பெரிய நகரம்; இந்தியாவின் 4-வது பெரிய நகரம் சென்னை. பழமையான வரலாற்று அடையாளங்களையும், புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் சென்னை மாநகரம் இன்று தனது 384-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை நகர் தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே வைத்திருக்கும் சென்னை மாநகராட்சி இன்று 384-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது. இன்றைய நவீன சென்னை, 384 ஆண்டுகளுக்கு முன்பு சென்னப்பட்டணம் என்பதில் இருந்து தொடங்கியது. மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்த டச்சுக்காரர்களுக்கு எதிராக, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர், தங்களுக்காக கோட்டை, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புக்காக வாங்கிய மணல் திட்டுதான், 1639ஆம் ஆண்டு இதே நாளில் சென்னப்பட்டணம் என்ற பெயரில் கையெழுத்தானது. அன்றைய தினத்தை அடையாளமாக வைத்து சென்னை தினம் கொண்டாடப்படுகிறது

சீர்மிகு சென்னை.. சிங்காரச் சென்னை.. வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தமிழ்நாட்டுக்கே தலைநகரமாக உள்ள சென்னையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு இன்றைக்கு தலைமைச்செயலகமாக விளங்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னையின் அடையாளங்களில் ஒன்று.

சென்னை தோன்றிய நாளில்தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் உருவானது. 1639ஆம் ஆண்டுதான் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதல் கோட்டை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைதான். சென்னையையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் பிரிக்கவே முடியாது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தொடர்ந்து அதனையொட்டி, ஜார்ஜ் டவுன் என்ற பகுதியும் உருவானது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதிமன்றம்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னையில் ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், இராயபுரம் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்டான்லி மருத்துவமனை என பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை உருவாக்கினாலும், பல்லவர் காலத்திலேயே இன்றைய மயிலாப்பூர், ஒரு துறைமுக நகரமாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

காலப்போக்கில் சென்னை நகரை சுற்றி இருந்த பல கிராமங்கள் இணைந்தே தற்போது சிங்கார சென்னையாக உருவெடுத்துள்ளது. ஆங்கிலேயர்கள் சென்னை நகரை உருவாக்கினாலும், சுதந்திரத்திற்கு பிறகு சென்னையை நவீன சென்னையாக கட்டமைத்ததில் திராவிட இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு.

பழமையான வரலாற்று அடையாளங்களையும், புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் சென்னை, தமிழ்நாட்டின் அன்னையாகவும் தலைநகரமாகவும் மட்டுமல்லாமல் கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் திகழ்கிறது.

இந்தியாவிலேயே பழமையான முதன்மையான மாநகராட்சி என்கிற கம்பீரத்தோடு, உலகின் 31-வது பெரிய நகரம், இந்தியாவின் 4 பெரிய மாநகரங்களுள் ஒன்று என்ற சிறப்பை பெற்ற இந்த சென்னை மாநகரம், ஆண்டாண்டு காலமாக வாழ்வு தேடி வருபவர்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வாழ்வளித்து வருகிறது.

Also Read: "தாயின் துணை சிறப்பானது"- பிரக்ஞானந்தாவையும் அவரின் தாயையும் புகழ்ந்த செஸ் ஜாம்பவான் !