Tamilnadu

அண்ணாமலைக்கு வரவேற்பு: தடையை மீறி வெடி வைத்த பாஜக பிரமுகர்.. மோடி கிரிக்கெட் கிளப் தலைவர் அதிரடி கைது !

பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த 2020-ம் ஆண்டு பொறுப்பேற்று கொண்டார். அப்போது இருந்தே ஒவ்வொரு பகுதிக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் அதோடு சேர்ந்து தேர்தல் பிரசாரமும் செய்தார். அப்போது அவர் 2021-ம் ஆண்டு திருச்சிக்கு வருகை புரிந்திருந்தார். எனவே அவரை வரவேற்கும் விதமாக தொண்டர்கள் பூ அலங்காரம் உள்ளிட்டவையை செய்தனர்.

அப்போது அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக வெடி வெடிக்க தொண்டர்களுக்கு போலீசார் தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனையும் மீறி, திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த மோடி கிரிக்கெட் கிளப் தலைவரான நவநீதகிருஷ்ணன் என்பவர் சரவெடி வெடித்தார். இதனால் அவர் மீது கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை. இது தொடர்பான வழக்கு திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கூட, அவர் நேரில் ஆஜராகவில்லை. பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத காரணத்தினால் நவநீதகிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நவநீதகிருஷ்ணனை கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற இவர், கடந்த மாதம் திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, 'கோ பேக் ஸ்டாலின்' என்று கருப்பு பலூன் பறக்க விட்டதாக கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜனநாயகம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றுக்கு இப்போது என்ன பொருள்? - ஒன்றிய அரசை விமர்சித்த பிரதமரின் ஆலோசகர்