Tamilnadu

“நாடாளுமன்றத் தேர்தலில் வென்று, கலைஞருக்கு காணிக்கை செலுத்துவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று (19-08-2023) காலை, கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம்:

80 ஆண்டுகால பொதுவாழ்வு, அரை நூற்றாண்டு காலம் கழகத்தின் தலைமைப் பொறுப்பு, 5 முறை முதலமைச்சர், 13 முறை தேர்தல் களம் கண்டு அனைத்திலும் வெற்றி, ஒரு முறை சட்டமேலவை உறுப்பினர், நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பி, இந்திய அரசியலில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் வழிகாட்டிய மூத்த தலைவர், பல பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் தீர்மானித்தவர், இலக்கியவாதி, கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை - வசனகர்த்தா, பத்திரிகையாளர் என இத்தனைப் பேராற்றலையும் ஒருங்கே பெற்ற ஒருவர், நம் தலைவர் கலைஞரைத் தவிர வேறு எவர் இருக்கிறார்? உலகளவில் தேடிப் பார்த்தாலும் இந்தளவுக்குப் பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரைக் காண்பது அரிது.

நூற்றைம்பது ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத் தனது 80 ஆண்டு கால பொதுவாழ்வில் ஓய்வின்றி உழைத்து நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை தி.மு.கழகம் சார்பிலும், அவரது வழியில் நடக்கும் நமது திராவிட மாடல் அரசின் சார்பிலும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.

அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த அண்ணா அறிவாலயத்தில் நாம் கூடியிருக்கிறோம். இந்த அறிவாலயம் அமைந்துள்ள அண்ணா சாலையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளையும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலான திட்டங்களையும் உருவாக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதல், குமரி முனையில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வரை தமிழ்நாடெங்கும் பண்பாட்டு அடையாளங்களை உருவாக்கியவர் கலைஞர். மினி பஸ், மெட்ரோ ரயில், டைடல் பார்க், உழவர் சந்தை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் - என நாம் பட்டியலிடத் துவங்கினால் இன்று முழுவதும் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம். இப்படி திட்டங்கள் பல தீட்டி ஒவ்வொரு தமிழரும் சுயமரியாதையுடன் வாழ ஓயாது பாடுபட்டவர் தலைவர் கலைஞர்.

இந்தியாவுக்கே முன்னோடியாக அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களைத்தான், ஒன்றிய அரசுகள் நடைமுறைப்படுத்தின. இப்போதும் நடைமுறைப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட தலைவரின் வரலாற்றை மறைக்க, திரித்து எழுதும் கூட்டத்திடமிருந்து, உண்மை வரலாற்றை நாம் காப்பாற்றிட வேண்டும் என்றால், திரும்பத் திரும்ப தலைவர் கலைஞரின் உழைப்பை, போராட்டத்தை, சாதனைகளைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதனால்தான் தலைமைக் கழகம், மாவட்டக் கழக நிர்வாகங்கள் மட்டுமின்றி கழகத்தின் சார்பு அணிகளுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தலைமைக் கழகத்தால் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு அதன் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அடிப்படையில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இது குறித்து முரசொலியில் உடன்பிறப்புகள் கடிதத்தில் விரிவாக எழுதியுள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஊராக இருந்தாலும் அதில் கலைஞர் ஆட்சியின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கும். அவர் கொண்டு வந்த திட்டங்களால் பயன் பெற்றவர்கள் இருப்பார்கள். அதையெல்லாம் நீங்கள் கவனித்து, அந்தந்த ஊர் மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். காணொலிகளாக, துண்டுப் பிரசுரங்களாக வழங்க வேண்டும்.

எல்லா இடத்திலும் எல்லோர் மனதிலும் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலை, சாதனைகளை, அதனால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பெற்ற நன்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை மட்டுமல்ல, நமது இனம் - மொழி வாழ அயராது பாடுபட்ட தலைவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். 2024 தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன், இதனை முழுமையாக நிறைவற்றிட வேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் இதே வேளையில்தான், வரும் ஆண்டு கழகத்தின் 75-ஆவது ஆண்டு விழாவையும் கொண்டாட இருக்கிறோம். எனவே, செப்டம்பர் 17-க்குப் பிறகு, இந்நிகழ்ச்சிகளில் பவள விழாவையும் சேர்த்தே கொண்டாடுங்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, 2024 ஜூன்-3 அன்று, நூற்றாண்டு நாயகர் கலைஞருக்கு அவர் பிறந்தநாளில் நாம் நன்றிக் காணிக்கை செலுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”கலைஞர் நூற்றாண்டு விழாவினைக் கொள்கைத் திருவிழாவாகக் கொண்டாடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!