Tamilnadu

அரசுப் பள்ளிக்கு ரூ1 கோடி நிதி.. மதுரை சென்ற முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு : யார் இந்த ராஜேந்திரன்?

இராமநாதபுரத்தில் இன்று திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனை முன்னிட்டு நேற்று மதுரை புறப்பட்ட முதலமைச்சர், அங்கே பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம்.எஸ்.செளந்தரராஜனின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று இராமநாதபுரம் புறப்பட தயாராக இருந்தார். ஆனால் அதற்கு முன்பாக மதுரை மாநகராட்சி பள்ளிக்கு சுமார் ரூ.1 கோடி அளவில் புதிய கட்டடம் உள்ளிட்டவற்றிக்கு உதவிய ராஜேந்திரன் என்பவரை நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்தார். தொடர்ந்து ராஜேந்திரனின் சேவைக்கு அவர் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியான பத்திரிகை செய்தி குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.8.2023) மதுரையில், பல்வேறு சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.

அப்போது, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, சால்வை அணிவித்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையையும் வழங்கி சிறப்பித்தார். சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரன் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டி, அவரது சமூகப் நலப் பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த ராஜேந்திரன் ?

விருதுநகரை பூர்வீகமாக கொண்டவர் ராஜேந்திரன் (86). பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்த இவர், அரிசி, காய்கறி வியாபாரத்தை தொடங்கியுள்ளார். அப்படியே படிப்படியாக முன்னேறி, வடகம், மோர் மிளகாய், வத்தல் என தனது வியாபாரத்தை விரிவு படுத்தினார். தற்போது 'திருப்பதி விலாஸ்' என்ற பெயரில் இந்த வியாபாரத்தை செய்து வருகிறார்.

சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Also Read: ”2024-ல் நாட்டு மக்களால் பா.ஜ.க தூக்கி எறியப்படும்”.. வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் நம்பிக்கை!