Tamilnadu
“இந்திய நாட்டின் தியாகிகளை பாராட்டுவதில் கழக அரசு சளைத்தது அல்ல” : சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் உரை!
இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினம் நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
அந்த வகையில், சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டைக்கு சென்றடைந்தவுடன் திறந்தவெளி வாகனத்தில் நின்று முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு, இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மதராஸ் மாகாணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது.
1968-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு - பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தமிழ் மண்ணின் முதலமைச்சராக ஆன பிறகுதான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. 'ஒரே ஒரு சங்கரலிங்கனார் தான் செத்துப் போயிருக்கிறார் என்று நினைப்பீர்களேயானால் தமிழ்நாடு என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் சேர்த்து ஐந்து உயிர்களைத் தரத் தயாராக இருக்கிறோம்' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள்!
'எல்லாரும் பிரிந்து போனபிறகு தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் ஏன் இருக்க வேண்டும்? அதனைப் பார்த்துக் கொண்டு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?' என்று கேட்டவர் தந்தை பெரியார். இத்தகைய பார்போற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான், மூன்றாவது ஆண்டாக இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன்.
400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்தக் கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் எனது அன்பான வணக்கங்கள்!
கடந்த ஆண்டு இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடினோம்.இந்த ஆண்டு நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டில் கோட்டையில் நின்று கொடியேற்றும் வாய்ப்பை நான் பெற்றமைக்காகப் பெருமை அடைகிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சர்கள் அனைவருக்கும் விடுதலை நாளன்று கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்து - மாநில சுயாட்சிக் கொடியைக் காத்த தலைவர்தான் கலைஞர் அவர்கள். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது என்பது தமிழை - தமிழ்நாட்டைக் கொண்டாடுவது ஆகும் என்ற அடிப்படையில் அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறோம்.
இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.
* மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம்!
* பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை!
* மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!
* பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது!
* பெருந்தலைவர் காமராசருக்கு, மணிமண்டபம்!
* மூதறிஞர் இராஜாஜிக்கு, நினைவாலயம்!
* தில்லையாடி வள்ளியம்மாளுக்கு, மணிமண்டபம்!
* வீரவாஞ்சியின் உறவினருக்கு, நிதி!
* வ.உ.சி. இழுத்த செக்கு, நினைவுச் சின்னம் ஆனது!
* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம்!
* தியாகிகளுக்கு, மணிமண்டபம்!
* சுதந்திரப் பொன்விழா நினைவுச் சின்னம்!
* தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!
* நேதாஜிக்கு சுபாஷ் சந்திர போஸுக்குச் சிலை!
* தியாகி கக்கனுக்குச் சிலை!
* சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்! - இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிப்பற்று - இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாகக் கொண்டவர்கள் நாம்.
* 1962-ஆம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் அதைஎதிர்கொள்வதில் பண்டித நேரு அவர்களுக்குத்துணை நின்றார்கள்.
* 1971-ஆம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, இந்திய மாநிலங்கள் எல்லாம் 25 கோடி ரூபாய் நிதிதிரட்டி இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் அளித்தபோது அதில் தமிழ்நாட்டின் பங்காக ஆறு கோடி ரூபாய் அளித்தது தலைவர் கலைஞரின் அரசு.
* 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின்போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணையாக மொத்தம் 50 கோடி ரூபாயை வழங்கினார் முதலமைச்சர் கலைஞர்.
இன்றைய திராவிட மாடல் அரசும் நம் நாட்டுத் தியாகிகளை மதித்துப் போற்றி வருகிறது.
*இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு விழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடினோம்.
*மகாகவி பாரதியார் பிறந்தநாளை ‘மகாகவி நாள்’ என அறிவித்தோம்.
*மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தேன்.
*செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப்பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டேன்.
* கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின்படைப்புகளைத் தொகுத்துப் பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளோம்.
*உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டது.
*கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது.
* கிண்டியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
* விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி, ஒளிக் காட்சிகள் அமைத்திட நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
*காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த 3 கோடியே 36 லட்சம் ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்களுக்குத் திருப்பூர் மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்க 2கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தியாகி ஈஸ்வரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் அரங்கம் அமைக்க 2 கோடி 60லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தனது வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டுக்குவந்தவர் அண்ணல் காந்தியடிகள் அவர்கள். அரையாடை அணிவது என்ற முடிவை மதுரை மண்ணில் இருந்துதான் காந்தியடிகள் எடுத்தார்கள். இதன் அடையாளமாகச்சென்னை அருங்காட்சியகம் வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்துள்ளோம். அதனை நான் திறந்து வைத்தேன்.
*இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான நிதி கொடையை தொடர்ந்து வழங்கி வருகிறது, தமிழ்நாடு அரசு.
*விடுதலைப் போராட்டத்தின் பவள விழாவை ஒட்டி கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமும், குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும்உயர்த்தப்பட்டுள்ளது.
*அதுபோல் விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுக்கு தொடர்ந்துஉதவிகளை செய்து வருகிறது நம் அரசு.
*விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து, 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
விடுதலைப் போராட்ட வீரர்களை ஏன் போற்றுகிறோம் என்றால் தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. சுதந்திர தாகத்தில், விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கங்கள் வீரம்விளைந்த தமிழ் மண்ணில் தோன்றியவைதான் என்பதை நாம்பெருமிதத்தோடு நினைவு கூரமுடியும்.
1600-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி இங்கு காலூன்றியது என்று சொன்னால் அவர்களது அடக்குமுறைக்கு எதிராக உடனடியான சுதந்திர முழக்கத்தை எழுப்பிய மண் தமிழ்நாடு.
1857 சிப்பாய்க் கலகத்தைத்தான் முதலாவது இந்திய விடுதலைப் போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் 1755-ஆம் ஆண்டு முதல் தெற்கில் அதுவும் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நின்று கொடியை ஏற்றும்போது தமிழனாகப்பெருமைப்படும் - உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படுவதற்கு இதுதான் காரணம்.அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ -அன்றைய தினமே விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண் நம்முடைய தமிழ் மண்.
இந்தக் கொடி இந்திய நாட்டைக் காத்த கொடி மட்டுமல்ல, காக்கும் கொடி! காக்கப் போகும் கொடி! இது வெறும் கொடியல்ல, கோடானு கோடி இந்திய மக்களின் மணிமுடி இந்தக் கொடி. இந்தியாவின் விடியலுக்கு வித்திட்ட இந்த மூவண்ணக் கொடிதான் -எதிர்கால இந்தியாவை உருவாக்கவும் உணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டி வரும் கொடியாகும்.
பரந்து விரிந்த இந்திய நாட்டில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள்.
பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.
பல்வேறு வழிபாட்டு நம்பிக்கை கொண்டவர்கள் வாழ்கிறார்கள்.
மாநிலத்துக்கு மாநிலம் உடை மாறுபடுகிறது.
மாநிலத்துக்கு மாநிலம் உணவு மாறுபடுகிறது.
மாநிலதுக்கு மாநிலம் உணர்வும் உணர்ச்சியும் மாறுபடுகின்றன.
பண்பாடும், பழக்க வழக்கங்களும் மாறுக்படுகின்றன.
இவ்வளவு வேற்றுமை இருந்தாலும் - அந்த வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ்கிறோம்.
ஒரு குடையின் கீழ் வாழ்கிறோம் என்பார்களே - அதே போல
ஒரு கொடியின் கீழ் நாம் வாழ்கிறோம்.
அதுதான் இந்த மூவண்ணக் கொடியாகும்.
மூவண்ணக் கொடியை வணங்குவதன் மூலமாக நாட்டை வணங்குகிறோம். நாட்டு மக்களை வணங்குகிறோம். மூவண்ணக் கொடிக்கு முன்னால் அணி அணியாக அணிவகுத்து நிற்கும் நாட்டு மக்கள் அனைவர்க்கும் எனது அன்பான வணக்கங்கள்!
சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்கக் காரணமாக அமைந்த வீரத்தியாகிகள் அனைவர்க்கும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தகைய தியாகிகளை ஈந்த அவர்தம் குடும்பத்தினர் வாழும் திசை நோக்கி வணங்குகிறேன்.
இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய பெருமக்கள் அனைவரும் - விடுதலை பெற்ற இந்திய நாடு எப்படி இருக்க வேண்டும்? இது யாருக்கான இந்தியாவாக அமைய வேண்டும் என்பதைக் கனவு கண்டார்கள். ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியாவே விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் இருந்த போது - விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை வகித்த மகாத்மா காந்தி அவர்கள் தலைநகர் டெல்லியில் இருக்காமல், மதவெறிக் கலவரங்கள் நடந்த நவகாளிப் பகுதியில் இருந்தார். அதுவும் பாதுகாப்பான இடத்தில் இருக்காமல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் போய் தங்கி இருந்தார். தனது அறச்சிந்தனையால், நல்ல உள்ளத்தால் கலவரத்தைக் கட்டுப்படுத்தினார் காந்தி.
''பஞ்சாப்பில் 55 ஆயிரம் வீரர்கள் இருந்தாலும் கலவரங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் வங்காளத்தில் ஒற்றை வீரராக இருந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தி விட்டீர்கள்" என்று அண்ணல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார் அன்றைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன்.
கல்கத்தாவை அமைதிப்படுத்திய அண்ணல் காந்தி - அடுத்து டெல்லிக்கு வந்தார். அதே அமைதியை உருவாக்கினார். மதங்களின் பெயரால் மனமாச்சரியங்களின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டால் அந்த இடத்துக்குச் சென்று அமைதிப்படுத்துவதே தனது முக்கியமான பணி என்று கருதினார் காந்தி. "பரம ஏழைகளாக இருப்பவர்கள் இது எனது நாடு என்று என்றைக்கு நினைக்கிறார்களோ, எதனுடைய உருவாக்கங்களில் அவர்களது குரல் ஓங்கியிருக்கிறதோ, எந்த ஒரு இந்தியாவில் உயர் வகுப்பினர், தாழ்த்தப் பட்டவர் என மக்களுக்குள் வேறுபாடு இருக்காதோ, எந்த ஒரு நாட்டில் எல்லா வகுப்பினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வார்களோ, அதுதான் உண்மையான இந்தியா" என்று சொன்னார் அண்ணல் காந்தியடிகள்.
25 வயதில் தூக்கு மேடைக்கு சிரித்துக் கொண்டே சென்ற மாவீரன் பகத்சிங் சொன்னார்... ''பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு ஏங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன்... இவைகள் இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா'' என்றார் பகத்சிங்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு இறுதிக்காலத்தில் சிம்ம சொப்பனமாக இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம்தான், இனி அதிக காலம் இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது என்ற எண்ணத்தை பிரிட்டிஷாருக்கு உருவாக்கியது. ''ரத்தத்தைத் தாருங்கள் விடுதலையை வாங்கித் தருகிறேன்' என்று சொல்லி இந்தியன் நேஷனல் ஆர்மியை உருவாக்கியவர் நேதாஜி அவர்கள். ''இந்தியாவின் பயணம் என்பது சோசலிசத் திசைவழியில் செல்ல வேண்டும்” என்றார் நேதாஜி.
சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக் கொடுத்த அண்ணல் அம்பேத்கர் அவர்களும் -அனைவருக்கும் பொதுவான இந்தியாவைத்தான் விரும்பினார்.''வகுப்புகளுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வையும், பாலினங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வையும் அப்படியே விட்டுவிட்டுப் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்த சட்டங்களை உருவாக்கிக் கொண்டே செல்வது என்பது, நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கிவிடும். இது சாணக்குவியலுக்கு மேலே மாளிகையைக் கட்டுவதைப் போன்று ஆகிவிடும்" என்று சொன்னவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.ஏற்றத்தாழ்வும் - வேறுபாடுகளும் கொண்ட இந்தியாவாக அது அமைந்துவிடக் கூடாது என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வழியுறுத்தினார்கள்.
இதனைத் தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் வலியுறுத்தினார்கள்.''மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன் - ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும். உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள் மறைய வேண்டும். அனைவர்க்கும் அனைத்தும் பொதுவான கூட்டுறவுச் சமதர்மம் உருவாக வேண்டும்" - என்பதையே தனது இலக்காகச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
இவர்கள் அனைவரும் விரும்பியது சமத்துவ - சகோதரத்துவ - சமதர்ம இந்தியா. இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும். அத்தகைய ஒரு அரசைத் தான் நாங்கள் தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த அடிப்படையில்தான் ஆட்சியும் அமைந்துள்ளது. வளர்ச்சி என்பதும் இதனை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறோம்.
தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும்,பேரறிஞர்அண்ணாவும் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி! கடந்த இரண்டாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால் ஒரே ஒரு துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக அமைந்திருக்கும். மாணவ மாணவிகளின் அறிவுத் திறனை மேம்படுத்த, ‘நான் முதல்வன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டத்தின்கீழ்கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 13 லட்சம் மாணவர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டு அதில் 3.5 இலட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பல்வேறு பணிகளில்அரசின் உதவியுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இன்னொரு முன்னெடுப்பைச் செய்ய இருக்கிறோம்.தாய்நாட்டிற்காக தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவுபெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும்வகையில், சுமார் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,000 நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறன் மேம்பாடுசெய்யவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிவிக்க விரும்புகிறேன். ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ (Ola, Uber, Swiggy, Zomato) போன்ற நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்களின் (GIG workers) ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வண்ணம், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.
ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கென ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். எட்டுக் கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் பயனடையும் ஆட்சியாக - பலனடையும் ஆட்சியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இன்றைக்கு தமிழ்நாடு அனைத்து வகையிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் ஆகிய அனைத்து வகையிலும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழங்கி வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!