Tamilnadu
”உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை”: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிக்கும் எண்ணத்தில் நீட் தேர்வை எதிர்கொண்ட நிலையில் இரண்டு முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலிலிருந்த ஜெகதீஸ்வரன், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை அருகே நேற்று முன்தினம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வ சேகர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் இறப்புக்கு நீட் தேர்வு தான் காரணம் என்று பேட்டியளித்திருந்த அவர் மனைவியைப் பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட செல்வ சேகர் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் , நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை செல்வ சேகர் அவர்களும் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுள்ளார். பிள்ளைகளை பலிவாங்கிய நீட் - இப்போது பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளுவது மிகுந்த வேதனையைத் தருகிறது.
நீட் ரத்துக்காக இருமுறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டும், அதனை கிடப்பில் போடுவதும், திருப்பி அனுப்புவதும் என்று ஆளுநர் தன் கடமையிலிருந்து தவறியது தான் இந்த தற்கொலைகளுக்கு காரணம்.
தமிழ்நாடு மாணவர்களின் மனநிலை புரியாமல் ஆளுநர் தனி உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்று திமிராக பேசுகிறார். அது அவரது அறியாமை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநில கல்விக்கு முக்கியத்துவம் தரும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை சிதைத்து - உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை. இதற்கான தீர்வு 2024 மக்களவைத்தேர்தலுக்குப் பின் நிச்சயம் ஏற்படும். எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும் - மனஉறுதியுடனும் இருக்க வேண்டுமென உங்களின் அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!