Tamilnadu

பகுதி நேர வேலை : டெலிகிராமுக்கு அனுப்பப்பட்ட Link.. லட்சகணக்கில் பணத்தை இழந்த நபர் - 5 பேர் அதிரடி கைது!

சென்னை முகப்பேரில் படித்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸப்பில் மர்ம நபர்கள் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை பார்த்தல் பணம் சம்பாதிக்கலாம் என்பது குறித்த விளம்பரங்களை அனுப்பியுள்ளனர். அதனை நம்பிய இவர், தொடர்பு கொண்டபோது, டெலிகிராம் மூலம் லிங்க் ஒன்றை அனுப்பி அதனை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், இந்த நபரும் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் இவரிடம் முதலீடு செய்ய லட்ச கணக்கில் பணம் கேட்டுள்ளனர். அவர்கள் கூறிய படி இந்த நபரும், பணத்தை அனுப்பியுள்ளார். இவ்வாறாக 2 வங்கி கணக்குகளுக்கு சுமார் ரூ.18 லட்சத்து 23 ஆயிரம் வரையிலான பணத்தை அந்த நபர் டெபாசிட் செய்துள்ளார்.

இதையடுத்து தனக்கு வேலை குறித்த தகவல் வரும் என்று காத்திருந்த அந்த நபருக்கு இதுகுறித்த அடுத்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் உணர்ந்துள்ளார். பின்னர் இதுகுறித்து சென்னை காவல் ஆணையாளரிடம் கடந்த 10-ம் தேதி பாதிக்கப்பட்ட நபர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் புகார்தாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் முகவரிகள் மற்றும் அடையாள விவரங்கள் போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மோசடி வங்கி கணக்கிலிருந்து செய்யப்பட்ட பண பரிவர்த்தனைகளும் ஆய்வுக்கு உட்படுத்தபட்டன. விசாரணையில் குற்றவாளிகள் சென்னை ஐ.சி.எப்-லிருந்து இந்த குற்றத்திற்காக வங்கி கணக்குகள் தொடங்கி அதனை வெளிநாட்டில் இருக்கும் மோசடிகாரர்களிடம் கொடுத்து மக்களை ஏமாற்றியது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளான சென்னையை சேர்ந்த டார்லா பிரவின்குமார் (32), ராஜு (40), அசோக்குமார் (33), வீரராகவன் (33), பிரவீன்குமார், (31) ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலியாக ஒரு வங்கி கணக்கு தொடங்க முதலில் ரூ.50,000/- பெறப்பட்டதாகவும் பிரதி மாதம் ரூ.30,000/- வரை பெறப்பட்டது தெரியவந்தது.

மேலும் போலி ஆவணங்களை வைத்து தொடங்கிய வங்கி கணக்குகளை மலேசியாவிற்கு அனுப்புவதை வாடிக்கையாக அசோக்குமார், பிரவீன்குமார் மற்றும் வீரராகவன் கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகள் ஆன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடிக்காக பயன்படுத்தியுள்ளனர்.

இக்குற்ற செயலுக்காக பயன்படுத்தப்பட்ட 7 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. 5 குற்றவாளிகளும் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மோசடிக்காக உபயோகப்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் முடக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட விசாரணையில் குற்றாவளிகள் ஏற்கனவே மும்பை, இஸ்லாபூர் காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.

ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் டெலிகிராமில் ஒரு குரூப்பில் இணைக்கப்பட்டு யூடியூப் விடியோக்களுக்கு லைக் செய்வது, ஓட்டல்களுக்கு ரீவியூ எழுதுவது அல்லது கிரிப்ட்டோ கரன்சியில் டிரேடு செய்வது போன்ற டாஸ்களில் ஈடுபடுகின்றனர்.

ஆரம்பத்தில் ரூ.150 முதல் ரூ.1000 வரை லாபம் பெறுகின்றனர். அதே உத்வேகத்தில் அவர்களை டெலிகிராமில் ஐம்பது பேர் கொண்ட குழுவில் இணைக்கப்படுகின்றார்கள். அதில் தொடரவும் மேலும் பணம் சம்பாதிக்கவும் Subscription Fee செலுத்த சொல்லுகின்றனர். இவ்வாறு மற்றவர்களுக்கும் லாபம் கிடைத்ததாக போலி ஸ்கீரின்சாட்களை அதே குரூப்பில் ஷேர் செய்கின்றனர். இதனை நம்பி புகார்தாரர்கள் பணத்தை இழக்கின்றனர்.

இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை அணுகுமாறும், ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு பொதுமக்களை சென்னை பெருநகர காவல் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: நிர்மலா சீதாராமனுக்கு ஜெயலலிதா பற்றி என்ன தெரியும் ? அப்போது ஓரமாக நின்றவர் EPS -திருச்சி சிவா MP தாக்கு!