Tamilnadu

டூ வீலர்களை திருடி பார்ட் பார்ட்டா கழட்டி விற்பனை.. உல்லாசமாக இருந்த மெக்கானிக்: சிக்க வைத்த கட்டை பை!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனிப்படை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகத்தில் மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் கையில் கட்டைப் பையுடன் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அந்த நவரை பிடித்த விசாரணை செய்தனர். அப்போதுதான் ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த செங்குன்றத்தைச் சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.

மேலும் இவரிடம் விசாரணை நடத்தியபோது பலதிடுக்கிடும் தகவல் வெளிவந்தது. முருகன் மருத்துவமனை மட்டுமல்லாது குன்றத்தூர், போரூர், பூக்கடை ஆகிய இடங்களிலிருந்து இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது.

அதோடு திருடிய வாகனங்களை செங்குன்றம் அருகில் விளங்காடுபாக்கத்தில் தான் வைத்துள்ள இரு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைக்குக் கொண்டு சென்று வாகனங்களை 3 மணி நேரத்திலேயே தனித்தனியாகப் பிரித்து செட்டிமேட்டில் உள்ள தங்கபாண்டியன் என்பவரது இரும்பு கடையில் விற்பனை செய்தது இதில் கிடைத்த பணத்தில் பாதியை மனைவியிடமும் மீதி பணத்தில் மது குடித்துவிட்டு உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.

மேலும் நாகர்கோவிலை சேர்ந்த முருகன், 4 ஆண்டுகளுக்கு முன்பு குன்றத்தூரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி டூ வீலர் மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். செலவுக்குப் பணம் இல்லை என்றால் குன்றத்தூர் முருகன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனத்தைத் திருடி அதை உடனடியாக பிரித்து விற்று விடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். ஆனால் குன்றத்தூரில் ஒரு முறை கூட போலிஸாரிடம் சிக்கவில்லை.

பின்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செங்குன்றம் அடுத்த விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் முருகனுக்கு திருமணம் நடைபெற்றது. முருகனின் மாமனார் அவருக்குச் சொந்தமாக மெக்கானிக் ஷாப் வைத்துக் கொடுத்துள்ளார்.

இதில் வேலைபார்த்துக் கொண்டே முருகன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, குன்றத்தூர், போரூர், பூக்கடை ஆகிய இடங்களிலிருந்து இருசக்கர வாகனங்களைத் திருடி அவற்றைப் பிரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில்தான் போலிஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களில் 20 வாகனங்களைத் திருடி உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஒவ்வொருமுறை திருட வரும்போதும் செங்குன்றம் என பெயர் அச்சிடப்பட்ட ஒரு கட்டைப்பையைக் கொண்டு வந்துள்ளார். ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்ததால் அதைத் துருப்பாக வைத்து போலிஸார் முருகனைக் கைது செய்தனர்.

Also Read: எதிர்கடை என்பதால் நட்பாக பேசிய இளம்பெண்ணுக்கு திருமண தொல்லை.. 65 வயது முதியவர் அதிரடி கைது !