Tamilnadu

மணிப்பூரில் பெண்கள் மீது தொடரும் வன்முறை.. பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் !

மணிப்பூரில் மெய்தெய் - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தெய் சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளது. இந்த வீடியோ உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், மகளிர் அமைப்புகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று சென்னையில் திமுக மகளிரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுவதும் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக மகளிரணி உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுத்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, நாடாளுமன்ற வளாகம் காந்தி சிலை எதிரே இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், மல்லிகார்ஜூன் கார்கே, டி.ஆர்.பாலு, திரிச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் மக்களுக்கு நீதிவழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். அதோடு, மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அறிக்கை அளிக்க வேண்டும் என்ற பதாகைகள் ஏந்தியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read: ”அது உங்களுடைய உரிமைத் தொகை; இந்த திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது ” : முதலமைச்சர் எழுச்சிமிகு பேச்சு!