Tamilnadu

காலையில் கெத்து.. மாலையில் வெத்து: அரசு பேருந்தில் அட்ராசிட்டி.. மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலிஸ்

சென்னை எண்ணூர் பகுதியில் இருந்து வள்ளலார் நோக்கி தடம் எண் 56A பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பாண்டியன் திரையரங்கம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்து பேருந்து கொண்டிருக்கும் போது, தியாகராஜா கல்லூரி பேருந்து நிலையத்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் 4 பேர் பேருந்தின் மேற்கூரை மீது ஏறியும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட நிலையில் பேருந்து சாலையில் நின்று செல்லாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதில் தியாகராய கல்லூரி தான் கெத்து என முழக்கங்களை இட்டு மாணவர்கள் பேருந்து மேற்கூரை ஏறி அராஜகம் செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் மாணவர்களை தேடி வந்த நிலையில், கல்லூரியின் முதல்வர் உதவியோடு இரண்டாம் ஆண்டு பயலும் மாணவர்கள் 4 பேரை காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துக் சென்றனர். அங்கே அவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார், இனி இது போன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர்.

இனி இது போன்ற சம்பவம் தொடர்ந்தால் அல்லது நடந்து கொண்டால் நிச்சயம் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என வண்ணாரப்பேட்டை காவல் இணை ஆணையர் பவன் குமார் ரெட்டி எச்சரித்து கல்லூரி மாணவர்களை அனுப்பி உள்ளனர். மேலும் எந்த இடத்தில் மாணவர்கள் பேருந்து மேற்கூரை மீது ஏறி பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டார்களோ, அதே இடத்தில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து பேருந்து மீது ஏறி புகைப்படம் எடுத்துக் கொண்ட கல்லூரி மாணவர்கள் ஜோசப், கோகுல், பிரவீன் உட்பட நான்கு மாணவர்கள் பேருந்து மேற்கூரை மீது எந்த இடத்தில் ஏறினார்களோ அதே இடத்தில் இன்று காலை போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு போக்குவரத்து காவலர்களுக்கு உதவியாக இருந்தனர். மேலும் இதுபோன்ற தண்டனைகள் மாணவர்கள் இனிமேல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட கூடாது என்கின்ற எண்ணத்தை மேலோங்க செய்யும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கசிந்த மாணவிகளின் அந்தரங்க வீடியோ.. சக மாணவிகளே ஆண் நண்பர்களுக்கு அனுப்பிய கொடூரம் ! - காரணம் என்ன ?