Tamilnadu

”மோடி, ED-ஐ பார்த்து திமுக தொண்டன் கூட பயப்பட மாட்டான்”.. உதயநிதி ஸ்டாலின் அனல் பேச்சு!

திருவண்ணாமலையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்க்கிழகளையும்,மகளிர்-திருநங்கைகள்-மாற்றுத்திறனாளிகள்-ஆட்டோ ஓட்டுநர்கள் என 10 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து இந்தியாவே பாராட்டுகிறது. நம்பர் ஒன் முதலமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் அவர்களைப் பலரும் புகழ்ந்து பேசுகிறார்கள். இதை எல்லாம் பாசிச பா.ஜ.கவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது தி.மு.கவை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள். அப்போதுதான் அவர்களால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியும்.

இதனால் தான் அமலாக்கத்துறையைக் கொண்டு மோடி அரசு அச்சுறுத்தப்பார்க்கிறது. இதற்கு தி.மு.க அரசு பயப்படாது. தி.மு.கவில் இளைஞரணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி என பல அணிகள் இருக்கிறது.

ஆனால் பா.ஜ.கவில் இருக்கும் அணிகள் அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்றவைதான். இந்த அணிகளை வைத்து தி.மு.கவை பயமுறுத்தப் பார்க்கிறார்கள். செந்தில் பாலாஜியை மிரட்டினார்கள். இப்போது பொன்முடியை மிரட்டுகிறார்கள்.

இங்கு நடைபெறுவது எடப்பாடி ஆட்சி அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம். EDக்கும் பயப்பட மாட்டோம். எங்களுடைய கிளைச் செயலாளர்கள் கூட உங்களைப் பார்த்துப் பயப்பட மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”குட்கா அ.தி.மு.க.வை காப்பாற்றும் பா.ஜ.க; இவர்கள்தான் ஊழலுக்கு எதிரானவர்களா?" : முரசொலி சரமாரி தாக்கு!