Tamilnadu
உஷார்.. பணம் எடுத்து தருவதாக ATM கார்டை மாற்றிக்கொடுத்து நூதன மோசடி.. 2 பேரை அதிரடியாக கைது செய்த போலிஸ்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார சில பகுதிகளில் ATM மையங்களை குறிவைத்து நூதன மோசடியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் புகார் எழுந்தது. அதாவது, அங்கிருக்கும் ATM மையங்களில் பணம் எடுக்க வரும் நபர்களில் சிலர் எவ்வாறு பணம் எடுக்க தெரியாது என்று குழம்பி போய் நிற்பர். இதனை கண்ட நபர் ஒருவர் அவர்களுக்கு உதவி செய்வதாக தாமாக முன்வந்து பேச்சு கொடுப்பர்.
அந்த நபரை நம்பிய இவர்களும், ATM கார்டை கொடுத்தது மட்டுமின்றி பாஸ்வேர்டையும் கொடுத்துள்ளனர். பின்னர் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு, ATM கார்டை மாற்றி கொடுத்து நூதன மோசடியில் ஏமாற்றி வந்துள்ளார் அந்த நபர். இவ்வாறு பல நபர்களிடம் நடைபெற்றதால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய் உத்தரவின் பேரில், போலீசார் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் விசாரணையும் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் திண்டிவனம் வந்தவாசி சாலை வெள்ளிமேடு பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது. இதனால் அவர்களை தனியாக கூட்டி சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களிடம் சோதனை செய்ததில் பல ATM கார்டுகள், பணம் இருந்தது தெரியவந்தது. இதற்கு அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்பதால் அவர்களிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்தே இந்த ATM கார்டு குற்றத்தில் ஈடுபட்டது இந்த 2 பேர் என்று தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கையில், அந்த 2 பேரில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ஆபேல் (32) என்றும், மற்றொருவர் வேலூர் மாவட்டம் கோணவட்டம் கிராமத்தைச் சேர்ந்த முதர்ஷீர் (38) என்றும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த 81 ATM கார்டுகள், ரூ.48 ஆயிரம் பணம் உள்ளிட்டவையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ATM -ல் பணம் எடுக்க தெரியாதவர்களை குறிவைத்து பணம் எடுத்து தருவதாக கூறி, ATM கார்டை மாற்றிக்கொடுத்து நூதன மோசடியில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!