Tamilnadu

”ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது”.. அமைச்சர் பொன்முடி ஆவேசம்!

ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமாகச் செய்யும் அரசியலைத் தொடர்ந்து செய்து வருகிறார். துணை வேந்தர்கள் கூட்டத்தை ஏன் ஆளுநர் மாளிகையில் நடத்த வேண்டும் என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, " தலைமைச் செயலகத்தில் சிண்டிகேட் கூட்டம் நடைபெறுவதாகக் கூறும் ஆளுநர் துணை வேந்தர்கள் கூட்டத்தை ஏன் ஆளுநர் மாளிகையில் நடத்த வேண்டும்.

செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் தான் நடைபெற்று வருகிறது. சிண்டிகேட் பற்றிப் பேச ஆளுநருக்குத் தகுதி இருக்கிறதா என்று முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆளுநர் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காகத்தான் இவ்வாறு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் இவை எடுபடாது.

என்னையோ, துறை செயலாளரையோ அழைத்து ஆளுநர் பேசுவதை விட்டு பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுப்பதன் அவசியம் என்ன?. இங்கு என்ன நடக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு ஆளுநர் பேச வேண்டும்.

தவறுகளை முறையாகச் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் இவருக்கு வேண்டப்பட்டாதவர்களை கொண்டு வரவேண்டும் என்பதற்காக இது போன்று தவறான குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கக் கூடாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர் மதிக்கவில்லை. ஆளுநர் பா.ஜ.கவா, அ.தி.மு.க வா என்ற சந்தேகம் எழுகிறது. பல்கலைக்கழக மாநிலக்குழு விதியை மீறி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வடநாட்டைச் சேர்ந்த பேராசிரியர்களைக் குழுவில் சேர்க்க ஆளுநர் முயல்கிறார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை”.. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகி!