Tamilnadu
“செந்தில் பாலாஜி வழக்கு: பல சந்தேகங்கள் உள்ளது.. அமலாக்கத்துறை எதையும் மறைக்கக் கூடாது” : ஐகோர்ட் அதிரடி!
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். அதில், செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி ஜெ.நிஷாபானு தீர்ப்பு அளித்தார். ஆனால்,
செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை. அவர் உடல் நலம் தேறிய பின்னர், அவரை கஷ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கலாம் என்று நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து இரு தீர்ப்பில் எது சரியானது என்பதை முடிவு செய்ய 3-வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயனை நியமித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராக உள்ளதால், விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் நீண்ட வாதங்கள் நடத்தி வழக்கை இழுத்தடிக்க அனுமதிக்கக்கூடாது என்றார்.
அதற்கு நீதிபதி, ‘‘இந்த வழக்கை சனிக்கிழமை ஒரே நாளில் விசாரிக்கலாம். அன்று இருதரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்கலாம்’’ என்று கருத்து கூறினார். இந்த முடிவை வரவேற்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
இதையடுத்து நீதிபதி, ‘‘அ.தி.மு.க., வழக்கில் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கப்பட்டபோது, சனிக்கிழமை ஒரே நாளில் 3-வது நீதிபதி விசாரணை நடத்தினார். எனவே, இந்த வழக்கையும் விடுமுறை தினத்தில் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் அனுமதி கேட்கிறேன். இதுதொடர்பாக முடிவு எடுப்பதற்காக இந்த வழக்கு விசாரணை நாளை பிறபகலுக்கு தள்ளிவைக்கிறேன்’’ என்றார்.
பின்னர் நீதிபதி, ‘‘செந்தில் பாலாஜி நள்ளிரவு 1.39 மணிக்கு கைது செய்ததாக கூறப்படுகிறது. இதில் பல சந்தேகங்கள் உள்ளது. எனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை ஆவணங்களை (கேஸ் டைரியை) தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் எதையும் மறைக்கக்கூடாது. அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!