Tamilnadu
11,000 புடவை, 131 சூட்கேஸ், 44 AC மிஷின்.. ஜெயலலிதாவின் 28 பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்து வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்தாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் ஏராளமான நகைகள், புடவைகள், காலணிகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. அதோடு அந்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு நீதிமன்றம் சிறை தண்டனையும் விதித்தது.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக கர்நாடகாவில் நடைபெற்று வந்த நிலையில், அதற்காக அம்மாநில அரசு செலவு செய்த தொகையை ஈடு செய்ய ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்கவேண்டும் என ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கு முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேலும் வழக்கு தொடரப்பட்டது
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு சரியானது எனவும், உடனடியாக கர்நாடகா அரசு மற்றும் நீதித்துறை சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அனைத்து சொத்துகளையும் ஏலம் விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
எனவே, ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலத்தில் விட கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜவாலி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புடவை, சூட்கேஸ், வாட்ச்கள் என 28 பொருட்களை ஒப்படைக்குமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஜெயலலிதாவின் தங்கம், வைரம், மரகதம், முத்துக்கள் மற்றும் பல வண்ண கற்கள் என 30 கிலோ நகைகள் மட்டுமே கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ளதாகவும், மற்ற பொருட்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள பொருட்களை விரைந்து ஒப்படைக்குமாறும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற சோதனையின் போது, 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 91 கைக்கடிகாரங்கள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 27 சுவர் கடிகாரங்கள், 20 சோபா செட்கள், 91 கைக்கடிகாரங்கள், 12 குளிர்பதன பெட்டிகள், 140 வீடியோ கேசட்டுகள் 86 மின்விசிறிகள், 250 சால்வைகள் என 28 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது கூடுதல் தகவல்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!