Tamilnadu

கலைஞர் திறந்து வைத்த அண்ணா மேம்பாலத்துக்கு வயது 50.. மாநிலத்தில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம்!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அண்ணா மேம்பாலம். இதை ஜெமினி மேம்பாலம் என்றும் அழைப்பர். சென்னையில் இருப்பவர்கள் நிச்சயம் ஒரு முறையாவது இந்தப் பாலத்தை கடக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

சென்னை மக்களின் வாழ்க்கையோடு கலந்தது இந்த பாலம் என்றால் அது மிகையல்ல. 50 ஆண்டுகளாக இந்த அண்ணா மேம்பாலம் கம்பீரத்துடன் மக்கள் பயணிக்க தொடர்ந்து தனது சேவையை ஆற்றிவருகிறது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 1971ஆம் ஆண்டு இப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூ.70 லட்சம் செலவில் மாநிலத்தில் கட்டப்பட்ட முதலாவது மேம்பாலம் இதுவேயாகும்.

1973 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் பொது மக்கள் பயன்பாட்டுக்கு இது திறந்து விடப்பட்டது. இந்த மேம்பாலம் ஓர் வழிகாட்டும் அடையாளக் குறியீடாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கதீட்ரல் சாலை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலை ஆகியவற்றின் சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை செங்குத்தாக நின்று தீர்த்து வைத்தது இந்த 800 மீட்டர் நீள மேம்பாலம்.

தமிழகத்தின் முதல் மேம்பாலமாகவும் இந்தியாவின் மூன்றாவது மேம்பாலமாகவும் புகழ்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த மேம்பாலம் 50 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அண்ணா மேம்பாலம் என்றும் ஜெமினி மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் இந்த பாலம் , தலைமுறைகளைக் கடந்து மக்களின் உணர்வுகளை இணைத்து வருகிறது.

மக்களை கவரும் விதமாக கம்பீரமான வளைவுகளைக்கொண்ட இந்த பாலம் பல நூறுகதைகளையும் நினைவுகளையும் இன்று வரைக்கும் தாங்கி நிற்கிறது.

இந்த அண்ணா மேம்பாலத்தை ரூ. 9 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்பெற்ற கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மாநிலத்தின் பண்பாடு, இறையாண்மை, சுயாட்சி, முன்னேற்றம் ஆகியவற்றைக் குறித்திடும் மேற்கோள் வாசகங்களை 32 பித்தளை வில்லை (தகடு)களில் பொறித்துப் பதித்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read: காஷ்மீரை போல பிற மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை நீக்கத் தைரியம் இருக்கிறதா? -மோடிக்கு முரசொலி கேள்வி !