Tamilnadu
”நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு சரியான பாடத்தை புகட்ட மக்கள் தயார்”: முதலமைச்சர் அனல் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கும்முடிப்பூண்டி கி.வேணு அவர்களின் இல்ல திருமண விழாவில் ஆற்றிய உரை:
கடந்த 23-ஆம் தேதி பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவர்கள் பாட்னாவில் ஒரு கூட்டத்தை கூட்டினார். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு தேர்தல் வியூகத்தை அமைக்க வேண்டும். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை எந்த வியூகத்தோடு சந்திப்பது என்பதை பற்றி யோசிக்க, கலந்துபேசிட முதற்கட்டமாக, முதல் கூட்டமாக அந்த முயற்சி எடுத்து அந்தக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.
எனவே அதற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சம்தான், இன்றைக்கு பிரதமர் மோடி அவர்களே இறங்கி வந்து பேசும் சூழல் உருவாகி இருக்கிறது.
நான் கேட்கிற கேள்வி எல்லாம், மணிப்பூர் மாநிலம் - இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி. ஆளுகிற மாநிலம். அந்த மணிப்பூர் மாநிலம் கடந்த 50 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதுவரை பிரதமர் அந்தப் பக்கமே போகவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைகூட 50 நாட்களுக்குப் பிறகுதான் அமித் ஷா அவர்கள் நடத்தி இருக்கிறார். இதுதான் ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க ஆட்சியின் லட்சணம். இந்த லட்சணத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று சொல்லி இருக்கிறார். எனவே ஒரு நாட்டினுடைய சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும். மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார் நம்முடைய மோடி அவர்கள். எனவே மதப் பிரச்சனையை அதிகம் ஆக்கி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் கருதிக் கொண்டிருக்கிறார்.
நான் உறுதியோடு சொல்கிறேன், நிச்சயமாக உறுதியாக வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடத்தை மக்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள். தயாராகி விட்டார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களை உங்கள் மூலமாக, இந்த திருமண நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, நீங்களும் தயாராக இருக்க வேண்டும், உறுதியோடு இருக்க வேண்டும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆளுகிற உங்கள் ஆட்சி - திராவிட மாடல் ஆட்சி, தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை எடுத்துச் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறோமோ, அந்த உறுதிமொழிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
எனவே இது தொடர ,எப்படி தமிழ்நாட்டில் ஒன்று சேர்ந்து, நம்முடைய ஆட்சியை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தீர்களோ, அதேபோல் ஒன்றியத்தில் ஒரு சிறப்பான ஆட்சி - மதச்சார்பற்ற ஒரு ஆட்சி - நமக்காகப் பாடுபடும் ஒரு ஆட்சி - மாநில உரிமைகளை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கும் நிலையில் நடைபெறும் ஆட்சி உருவாகுவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக வேண்டும் தயாராக வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் உங்கள் அத்தனை பேரையும் கேட்டுக் கொண்டு, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை வாழ்த்துகிற அதேநேரத்தில், நான் மணமக்களை அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்.
தமிழன் என்ற அந்த உணர்வை வெளிப்படுத்துங்கள் என்று இந்த நேரத்தில் மணமக்களை கேட்டுக்கொண்டு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்“ வாழுங்கள்… வாழுங்கள்… வாருங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!