Tamilnadu
”தொழிற்துறையில் சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(27.06.2023) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில் ஆற்றிய உரை:-
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், இந்த தொழில் நிறுவனங்களுடைய நாள் மிகச் சிறப்பாக எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெறக்கூடிய விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சமூகநீதியும், சமச்சீர் தொழில் வளர்ச்சியும் தலைவர் கலைஞர் அவர்களின் இரு கண்கள். பெரு நிறுவனங்களுக்கும் சிறு நிறுவனங்களுக்கும் ஒரே கொள்கை என்பது அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீர் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பதை உணர்ந்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
இந்தியாவிலேயே முதன்முதலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கென தனியாக ஒரு கொள்கையைக் கொண்டுவந்தார். தொழில் முனைவோர்கள் எளிதில் தொழில் தொடங்க அனைத்து
அடிப்படை வசதிகளையும் கொண்டு 1970-ஆம் ஆண்டிலேயே சிட்கோ தொடங்கி வைத்தார். இன்றைக்கு தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் இருக்கின்றன. இவ்வாறு சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திட்டவர் தான் நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அவரது வழியில் பொருளாதார வளர்ச்சியிலும் சமூகநீதியை நிலைநாட்டிடும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், நம்முடைய தமிழ்நாடு அரசு ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற ஒரு மகத்தான திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் தொழிற்சாலைக்கான நிலம், கட்டடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மதிப்பில் 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 6 விழுக்காடு வட்டி மானியம் பத்து ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு
இவ்வளவு மானிய சலுகையுடன் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் இல்லை. திட்டம் அறிவிக்கப்பட்ட இந்த குறுகிய மூன்று மாத காலத்தில் இதுவரை 127 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு 24 கோடியே 26 லட்சம் ரூபாய் மானியத்துடன் 45 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் ஆணை பெறப்பட்டுள்ளது என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இதில் 100 பயனாளிகளுக்கு ஒப்புதல் ஆணை இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றும் MSME துறையின் முன்னேற்றத்திற்காக நம்முடைய அரசு தனிக்கவனம்
செலுத்தி வருகிறது. ஓய்வு பெற்ற அதிகாரி என்.சுந்தரதேவன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் குறுகிய கால நடவடிக்கைகள், நடுத்தர கால நடவடிக்கைகள், நீண்ட கால நடவடிக்கைகள் என வகைப்படுத்தி நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடித் தளமானது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில் மதுரையில் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது.
தொழில்முனைவோர்கள் 159 வகையான தொழில் உரிமங்களை 27 அரசு துறைகளிடமிருந்து எளிதாகப் பெற Single Window Portal 2.0 தளம் நமது அரசு பொறுப்பேற்றவுடன் துவக்கி வைக்கப்பட்டு, இதுவரை 20 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 17 ஆயிரத்து 618 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டு 1,903 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக குறுந்தொழில் நிறுவனங்கள் கொண்ட பல்வேறு குறுங்குழுமங்கள் (Micro Cluster) உள்ளன. ஊரகப்பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பினை உறுதி செய்திடவும், பாலினம் மற்றும் சமூக சமநிலையை உறுதிபடுத்திடவும் இந்த குறுங்குழுமங்களை மேம்படுத்துவது இன்றியமையாதது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்நிறுவனங்கள் தமது உலகளாவிய தரம் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், வளர்ந்து வரும் தொழில்துறையில் நுழைய வழிவகை செய்யவும் பெரும் குழுமங்கள் அமைக்கப்படும் என நமது அரசால்அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக 4 பெருங்குழுமங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* திண்டிவனத்தில் மருந்து பொருட்கள் பெருங்குழுமம்.
* திருமுடிவாக்கத்தில் துல்லிய உற்பத்திப் பெருங்குழுமம் (Precision Engineering Cluster)
* விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த பெருங்குழுமம் மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி, மின்வாகனத் துறை சார்ந்த பெருங்குழுமம் ஆகியவற்றை அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதுவரை 6 தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஆறு மாவட்டங்களில் 6 தொழிற்பேட்டைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை, கோயம்புத்தூர் போன்ற தொழில் மிகுந்த நகரங்களில் பணிபுரியும் வெளியூர், வெளிமாநில பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தரமான மற்றும் குறைந்த வாடகையில் தங்குமிட வசதி என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக சவாலாக இருந்து வருகிறது.
இதற்கு தீர்வாக அரசு சார்பில் தங்கும் விடுதிகள் (Hostel) கட்டித் தரப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக, சென்னை, கோயம்புத்தூர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிபறது. நமது அரசு பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டு, ஆண்டிற்கு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு செயல் திட்டங்கள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 6,257 புத்தொழில் நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் இந்தியா தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 -ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே, 2016-ஆம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரையிலான 5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கிற்கும் அதிகம்.
தி.மு.க அரசின் வேகத்துக்கும் செயல்திறனுக்கும் இதுவே சிறந்த சான்று என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை, ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளது போல, நடப்பு நிதிஆண்டில் சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் வட்டார புத்தொழில் மையங்களை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த நிதியாண்டு 30 கோடி ரூபாய் சிறப்பு நிதியைப் பட்டியலின பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்ற ஆண்டில், இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டில் 50 கோடி ரூபாயாக இந்த சிறப்பு நிதியானது உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களைப் புத்தாக்க சிந்தனையுடன், படிப்பு முடித்தபின் பலருக்கு வேலை கொடுப்பவராக மாற்றக்கூடிய “பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்” நமது அரசால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளை நான் பார்வையிட்டேன். இவர்களுக்கு தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தொழில்துறையின் வளர்ச்சிக்கு MSME நிறுவனங்களின் பங்களிப்பிற்காக விருது பெற்றுள்ள நிறுவனங்களுக்கும், நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்நிறுவனங்கள் மென்மேலும் வளர்ந்து இந்திய அளவில் ஏன் உலக அளவில் சிறப்பு பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.
MSME நிறுவனங்களின் உயிர்நாடி என்பது வங்கிகள் அந்த நிறுவனங்களுக்கு அளிக்கும் தடையில்லா நிதி வசதி. அந்த நிதிவசதியினை MSME நிறுவனங்களுக்கு வழங்கிய சிறந்த மூன்று வங்கிகளுக்கான விருதுகளையும் இன்று நான் வழங்கி உள்ளேன். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்கு கழக அரசு உறுதுணையாக இருக்கிறது - இருக்கும் என்பதை நான் உறுதி செய்கிறேன். அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு எடுத்து வருகிறது. கடந்த ஆட்சியில் MSME துறைக்கான நிதி ஒதுக்கீடு 607 கோடியே 60 லட்சம் ரூபாய் என இருந்த நிலையில், இது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 1505 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம் MSME துறை எடுத்திருக்கும் புதிய முயற்சிகளால் 120 பயனாளிகளுக்கு 59 கோடியே 71 லட்சம் ரூபாய் மானியம், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1510 கோடி ரூபாய், விருது பெறுவோர் 49 பேருக்கு 12
கோடியே 50 இலட்சம் ரூபாய், 262 ஏக்கர் பரப்பில் 153 கோடியே 22 லட்சம் ரூபாய் முதலீட்டில் 3 சிட்கோ தொழிற்பேட்டைகள் என மொத்தம் 1723 கோடியே 5 லட்சம் ரூபாய் அளவிற்கு பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நான் இதுவரை குறிப்பிட்ட 20க்கும் மேற்பட்ட திட்டங்கள் எல்லாம் MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நமது அரசு பொறுப்பேற்ற பின் தொடங்கப்பட்ட திட்டங்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சமத்துவ வளர்ச்சியாக இருக்க வேண்டும் என நாங்கள் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.
இந்தத் திட்டங்கள் எல்லாம் முழுமையாக வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால், உங்களின் ஒத்துழைப்பு குறிப்பாக MSME நிறுவன சங்கங்களின் பங்களிப்பு மிக, மிக இன்றியமையாதது. பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளான இன்று, தமிழ்நாட்டிலுள்ள
அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டு இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!