Tamilnadu
சூடு பிடிக்கும் ஆருத்ரா மோசடி விவகாரம் : RK சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்.. தொடர் சிக்கலில் பாஜக !
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஐயப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அதேபோல் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மீட்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. தொடர்ந்து இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலமாகியுள்ளது.
ஆர்.கே.சுரேஷ் ஏற்கனவே ரூ.5 கோடி வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.15 கோடி என உறுதியாகியுள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக ஜூன் 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில், வருவாய் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுத்த 1 லட்சம் புகார்கள் குறித்து இனி விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக போலிசார் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் ஆர். கே சுரேஷ் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு போலிசார் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இருப்பினும் அவர் நேரில் வராமல் தலைமறைவாக உள்ள நிலையில், குற்றப்பிரிவு போலிசார் அவரது வங்கி கணக்குகளை முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!