Tamilnadu

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்: “தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை..” அமைச்சர் சேகர் பாபு !

அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களை காப்போம் என்ற தலைப்பில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சிறப்பு மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்றார். அதற்கு முன்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறும். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். குறித்த நேரத்தில், குறித்த காலத்தில் பூர்வாங்க பணிகள் தொடங்கி கும்பாபிஷேகம் நடைபெறும். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை கோவிலில் ரோப் கார் வசதி தொடங்குவது குறித்து, சட்டபையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து, பணிகள் விரைவில் தொடங்கும்.

கோவில்களில் இந்துக்களின் மத வழிபாட்டு முறையை ஏற்று கொண்டு, வழிபாடு மேற்கொள்ள வரும் பிற மதத்தினரையும் அனுமதிக்கலாம். கோவில்கள் இந்துக்களின் அடையாளம். அதை ஏற்று கொண்டு வருபவர்களுக்கு தடை ஏதும் இல்லை. அதே நேரத்தில் பிற மத அடையாளத்துடன் வரும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது. அனைவரும் சகோதரத்துவத்தடன் வாழ்வதால் பிரித்து பார்க்க தேவையில்லை. அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்வதால், திராவிட மாடல் ஆட்சியில் பிரித்து பார்க்க தேவையில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படலாம் என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையும், கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய ஆணை பிறப்பித்து உள்ளது. அப்படி இருக்கையில் இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் அறிவிப்பு வெளியிடுவது ஏற்புடையது அல்ல.

எவை எல்லாம் செய்ய கூடாதோ அவை எல்லாம் செய்யவது தான் அங்குள்ள தீட்சிதர்களுக்கு பணியாக இருக்கிறது. அங்கு வைக்கப்பட்ட பலகையை எடுக்க சொல்லி கூறி கோவில் நிர்வாக அதிகாரியிடம், தகராறில் ஈடுபட்டு உள்ளனர். உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.

Also Read: “சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்குக்கு மாநில கல்லூரியில் முழு உருவ சிலை” -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு