Tamilnadu

சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு.. மேலும் 2 வழக்கு பதிவு செய்த CBCID போலிஸ்: சிக்கும் முக்கிய புள்ளிகள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு தேயிலை தோட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீஷன், உதயகுமார் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு சம்பந்தமாக தனிப்படை போலிஸார் விசாரித்த போது, சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இந்த கொலை கொள்ளை சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் மர்ம வாகன மோதியதில் கனகராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில் தற்போது சிபிசிஐடி போலிஸார் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜன் வாகன விபத்தில் மரணமடைந்தது குறித்து வழக்கு பதிவு செய்து சேலம், சென்னை, கோவை, நீலகிரி போன்ற பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல் கொடநாடு தோட்டத்தில் கணினி பொறியாளராக இருந்த தினேஷ் தற்கொலையும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதால் இது குறித்தும் சிபிசிஐடி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட தினேஷின் பெற்றோர்கள், சகோதரி உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக சிபிசிஐடி போலிஸார் கூறியுள்ளனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்குடன் கூடுதலாக இந்த இரு வழக்குகளையும் தற்போது சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: மலேசியா To திருச்சி.. விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6850 அரியவகை ஆமை குஞ்சுகள்!