Tamilnadu

“பங்குச்சந்தையில் முதலீடு.. ரூ.5 லட்சம் வரை லாபம்” : YouTube வீடியோ மூலம் பல கோடி மோசடி செய்த நபர் கைது!

பங்குச்சந்தையில் ரூ.5 லட்சத்துக்கு மேல் முதலீடு, 80 சதவிகிதம் வரை வருமானம், மாதம் தோறும் 12 முதல் 18 சதவிகிதம் வரை லாபம் என ஆசையை தூண்டும் விதமாக யூடியூப்பில் விளம்பரம் செய்துள்ளார் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் யூடியூப் மூலமாக இதுபோன்ற விளம்பரங்களை செய்து வந்த மணிகண்டன் வலையில் ஏராளமானோர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குவைத்தில் பிசியோதெரபி மருத்துவராக பணியாற்றி வரும் புதுச்சேரியை சேர்ந்த தணிகைச்செல்வன், மணிகண்டனின் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்துள்ளார்.

மேலும் இவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மணிகண்டன் வழிகாட்டுதல் படி ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து தணிகைச் செல்வம் தன் மூலமாக முதலீடு செய்தவர்களின் கணக்கு வழக்குகளை பார்த்துள்ளார். இந்த முதலீட்டிற்கு ஆரம்பத்தில் ஒரு சொற்பத் தொகையை லாபமாக வழங்கிய மணிகண்டன் அதன் பின்னர் ஒரு மாதத்தில் அதனை நிறுத்திவிட்டார்.

பொருளாதார சிக்கல் இருப்பதாக கூறி ஒரு மாதத்திற்கு நீங்களே லாபத் தொகையை வழங்குங்கள் சிக்கல் சரியான பின்னர் தங்களுக்கு அந்த தொகையை வழங்குவதாக மணிகண்டன் கேட்டுக்கொண்டதாக கூறுகிறார் பாதிக்கப்பட்ட தணிகைச் செல்வம்.

நாளடைவில் மணிகண்டன் தங்களிடம் மோசடியில் ஈடுபடுவதை அறிந்த தணிகைச் செல்வம் அவர் மீது சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து மணிகண்டனின் வங்கி வரவு செலவு கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து அவரை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மோசடிக்கு உடந்தையாக இருந்த மணிகண்டனின் மனைவி அபிராமி மைத்துனர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என புகார்தாரர் தணிகைச் செல்வம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தன்னைப் போன்று இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளதாகவும் சுமார் 14 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: மணிப்பூர் கலவரம் : “மக்களை குழப்பி வன்முறையை அதிகமாக்குவதுதான் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி” - முரசொலி !