Tamilnadu
கத்தி முனையில் ராப் இசைக் கலைஞர் கடத்தல்.. 10 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்: சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
மதுரையை சேர்ந்த ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் காரில் தனது நண்பர்கள் கெவின், கிளப்பன் கிரிஷ், முகமது இபராஹிம் அகியோருடன் மதுரவாயல் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனம் ஒன்று கார் மீது உரசிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. .இதையடுத்து காரை நிறுத்திவிட்டு இப்ராஹிம் இறங்கி வாகனத்திற்கு ஏதாவது சேதமாகியுள்ளதா எனப் பார்த்துள்ளார். அப்போது திடீரென இரண்டு காரில் வந்த 10 பேர் தேவ் ஆனந்தை கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
உடனே அவரது நண்பர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த திருவேற்காடு போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலிஸார் தேவ் ஆனந்த் கடத்தி செல்லப்பட்ட காரின் எண்ணையும், சுங்கச் சாவடி சிசிடிவி காட்சிகளையும் வைத்து ஆய்வு செய்தனர்.
இதில், கார் மதுரையை நோக்கிச் செல்வது உறுதியானது. இதையடுத்து அனைத்து மாவட்ட போலிஸார்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் போலிஸார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பொன்னமராவதியில் போலிஸார் சோதனை செய்து கொண்டிருந்த போது, தேவ் ஆனந்த் கடத்தி வந்த சிகப்பு நிற கார் வந்தது. உடனே உஷாரான போலிஸார் காரை தடுத்து நிறுத்தினர்.
பிறகு காரில் இருந்த தேவ் ஆனந்தை மீட்டனர். மேலும் காரில் இருந்த இருந்த 5 பேரை போலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேவ் ஆனந்தை கடத்தியது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர், முகத்துப்பாண்டி , முத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், சென்னையைச் சேர்ந்த கருப்பசாமி ஆகிய ஐந்து பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அதோடு இந்த கடத்தலில் 10 பேர் ஈடுபட்ட நிலையில் ஒரு காரில் வந்த ஐந்து பேரை மட்டுமே போலிஸாரிடம் சிக்கினர். மற்றொரு காரில் சென்ற 5 பேர் எங்கே சென்றார்கள் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு, இந்த கடத்தல் சம்பவம் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் சகோதரர் பெற்ற 2.5 கோடி ரூபாய் கடனை திரும்பப் பெற வேண்டும் என்று நோக்கத்துடனே அரங்கேறியது போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. ராப் இசைக் கலைஞர் கடத்தப்பட்டு 10 மணி நேரத்தில் காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்ட அவரை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!