Tamilnadu

மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவிக் குழுக்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன மகிழ்ச்சியான செய்தி!

ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மதி சிறகுகள் தொழில் மையத்தின் இலச்சினையை வெளியிட்டார். மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பயனாளர்களின் வெற்றி புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், :" பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் பொருளாதார சுதந்திரமே என தந்தை பெரியார் கூறியுள்ளார். அதனடிப்படையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களை 1989 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கினார். அன்று தர்மபுரியில் தொடங்கப்பட்ட இந்த சுய உதவிக்குழு இன்று தமிழ்நாடு முழுவதும் 7,22,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைதியாக தொழில்புரட்சியை செய்து வருகிறது. நான் யாருக்குப் பரிசு அளிப்பதாக இருந்தாலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களைத் தான் வழங்குவேன். எனக்குப் பரிசுகள் வழங்குபவர்களிடமும் அந்த பொருட்களை வழங்க வேண்டும் என் வேண்டுகோளை வைத்துள்ளேன்.

பெரிய நிறுவனங்கள் உருவாக்கும் பொருட்களின் மீது இருக்கும் நம்பிக்கையை விட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

திராவிட மாடல் அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எப்பொழுதும் துணை இருக்கும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் தற்போது கடன் உதவி பெரும் நிலையிலிருந்து பொருளாதாரத்தை உருவாக்குபவர்கள் என்கிற நிலையை அடைந்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களில் உருவாக்கும் பொருட்களை இ - காமர்ஸ் முறையில் சந்தைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவிக் குழுக்கள் தொடங்க வேண்டும் எனத் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கோரிக்கை வைத்துள்ளார். அது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: சாலை விபத்து.. இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு!