Tamilnadu

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் கைது.. இல்லாத கவுன்சிலர் பெயரில் அவதூறு பரப்பிய வழக்கில் போலிஸார் அதிரடி !

மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12.வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதாகவும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அவர் இறந்துவிட்டார் என்றும் பாஜக மாநிலச் செயலாளராக இருக்கும் எஸ்.ஜி. சூர்யா என்பவர் தன்னுடைய டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் பதிவிட்டிருந்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட தொழிலாளி பட்டியலினத்தை சார்ந்தவர் எனவும், இதனால் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது என்றும், இதனை கண்டு கொள்ளாமல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ளமௌனம் காக்கிறார் என்றும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து வதந்தியை பரப்பி தவறான தகவலை அளித்த எஸ்.ஜி. சூர்யா மீது அவதூறு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 12ஆம் தேதி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், "மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே கிடையாது. விஸ்வநாத் என்ற கவுன்சிலரும் கிடையாது. அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறாத போது வதந்தியை கிளப்பி, சமூக பதட்டத்தை ஏற்படுத்தி சாதி ரீதியான மோதலை தூண்டுவதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு செய்திகளை பாஜக நிர்வாகியான எஸ்.ஜி.சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்துள்ள மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர், இன்று இரவில் சென்னை தியாகராய நகரில் வைத்து எஸ்.ஜி. சூர்யாவை கைது செய்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து இரவோடு இரவாக மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

Also Read: ”எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பாஜகவின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!