Tamilnadu
ஓராண்டில் உலகத்தர மருத்துவமனை.. கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள் இதோ!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.6.2023) சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் மொத்தம் 6 லட்சம் சதுரஅடி பரப்பளவில், 1000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து திறந்து வைத்தார்.
மேலும், சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையினையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு கட்டடம் கட்டுவதற்காக முதற்கட்டமாக 230 கோடி ரூபாய் நிதியும், பின்னர் கூடுதலாக 10 கோடியே 54 இலட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21.3.2023 அன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த 1000 படுக்கை வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், இருதயவியல் துறை, இருதய அறுவை சிகிச்சை துறை, நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, குடல் இரைப்பை மருத்துவத் துறை, குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக மருத்துவத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சை துறை, மூளை இரத்தநாள கதிரியல் துறை ஆகிய உயர்சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கான வசதிகளை கொண்டுள்ளது.
மேலும், அவசர சிகிச்சை பிரிவு, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை, மத்திய ஆய்வகம், இரத்த வங்கி, கதிரியல் துறை (CT, MRI, USG, Digital x-ray), இயன்முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை ஆகிய சிறப்புத் துறைகளையும், இருதய கேத்லேப் பிரிவு, மூளை இரத்தநாள கேத்லேப் பிரிவு, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, தீவிர மயக்கவியல் பிரிவு, 15 நவீன அறுவை அரங்குகள் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த உயர்சிறப்பு மருத்துவமனையில், 146.52 கோடி செலவில், பல்வேறு நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையின் செயல்பாட்டிற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், பிற துணை மருத்துவ ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் நவீன வசதிகளுடைய தனி அறைகள், மத்திய நுண்கிருமி நீக்கு நிலையம், நவீன சலவையகம், மத்திய மருந்தகம், மத்திய ஆய்வகம், மருத்துவப் பதிவேடுகள் துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், சிற்றுண்டியகம், தகவல் மையம், 24 மணி நேர தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, உதவி மையம், காத்திருப்பு அறை, மருத்துவக் கழிவு பராமரிப்பு, ஆக்ஸிஜன் குழாய் அமைப்பு, தரக்கட்டுப்பாட்டு துறை, மத்திய சேமிப்பு கிடங்கு, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆகிய இதர வசதிகளையும் கொண்டுள்ளது.
இம்மருத்துவமனையில், இயக்குநர் அலுவலகம், செவிலியர் கண்காணிப்பாளர் அலுவலகம், நிர்வாக அலுவலகம், நிலைய மருத்துவ அலுவலகம், கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை ஆகிய நிர்வாகப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனை சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த மருத்துவமனையில் உள்ள மேம்பட்ட வசதிகளாலும் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!