Tamilnadu

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மண்ணெண்ணெய் கேனுடன் மனு கொடுக்க மாற்றுத்திறனாளியுடன் வந்த பெண்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி பகுதியை சேர்ந்த செண்பகவல்லி. இவருக்கு காசநோய் பாதிக்கப்பட்டு கண்பார்வையற்ற கணவரும், மாற்றுத்திறனாளி மகனும் உள்ளனர். இந்த சூழலில் நேற்றைய முன்தினம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே இங்கு மனு கொடுப்பதற்காக செண்பகவல்லி தனது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்துள்ளார். அப்போது வழக்கமாக போலீசார் நடத்தும் சோதனையில் இந்த பெண்ணும் பங்கேற்றார். அதில் இவரது பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் மண்ணெண்ணெய் கேன் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது தாங்கள் 27 ஆண்டுகளாக இருக்கும் வீட்டை பாஜக பிரமுகர்கள் சிலர் காலி செய்ய வேண்டும் என்று மிரட்டுவதாகவும், மேலும், வீட்டை காலி செய்ய தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அப்படி தாங்கள் அவர்கள் மிரட்டலுக்கு பயந்து காலி செய்தால், தனது கண்பார்வையற்ற கணவர், மாற்றுத்திறனாளி மகனும் இருக்க இடமில்லாமல் தெருவிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தார்.

எனவே, இந்த பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் செண்பகவல்லி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தனது கோரிக்கை மனுவை அளித்த செண்பகவல்லியிடம், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி அளித்தார். இந்த நிகழ்வால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: போலிஸ் என கூறி மருத்துவ மாணவர் கடத்தல்.. மிரட்டி பணம் பறித்த 3 இளைஞர்கள் போலிசில் சிக்கியது எப்படி ?