Tamilnadu
” இது எல்லாம் யார் கொண்டுவந்த திட்டம்? ”.. பழனிசாமிக்கு நினைவூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக பெயர் வைக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?
முதலமைச்சர் பதில்: தொடர்ந்து நாங்கள் இதற்கு விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இருந்தாலும் இப்போதும் கேட்கிறீர்கள். இதுமாதிரி நடந்து கொள்வது அதிமுக-வின் கலை, அவர்கள் பாணி தான் இது. சென்னையில் திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம். ஜெயலலிதா அம்மையார் அவர்களது பெயரை வைத்துக்கொண்டு அதை திறந்து வைத்தார்கள், நாங்கள் அதற்குக் கவலைப்படவில்லை.
அதே மாதிரி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தை திமுக ஆட்சியில்தான் புதிதாக கட்டினோம். அதை ஆட்சிக்கு வந்து அதிமுக என்ன செய்தது? அதை அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தது. சென்னையில் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் தான் தொடங்கி வைத்தோம். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் துணை முதலமைச்சராக இருந்தேன். நானே ஜப்பான் நாட்டிற்குச் சென்று அங்கே நிதி உதவியைப் பெற்று அதன் மூலமாகத்தான் ஒன்றிய அரசினுடைய உதவியைப் பெற்று அதை நாம் தொடங்கி வைத்தோம்.
அன்றைக்கு அதை எதிர்த்தவர்கள் யார் என்று கேட்டீர்களானால், மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள். முதலமைச்சராக இருந்தபோது அதை அவர்கள் எதிர்த்தார்கள், மெட்ரோ தேவையில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். பின்னர் அதன் திறப்புவிழாவின் போது தன்னுடைய பெயரை பொறித்துக்கொண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்கள்.
அதே மாதிரி கோட்டூர்புரத்தில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திமுக ஆட்சியில்தான் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் கட்டித் திறந்து வைத்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதை பாழ்படுத்தவேண்டும் என்று அதை எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்குப் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி, போராடி அதை நிலைநாட்டி இருக்கிறோம்.
இப்படியே சொல்லிக்கொண்டு சென்றால், அந்தப் பட்டியல் இன்னும் போகும். இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன். இதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அதேபோல, அம்மா உணவகம். ஆட்சிக்கு வந்தவுடன் அதை மூடிவிடுவார்கள், மூடிவிடுவார்கள் என்று திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரமே செய்தார்கள். அதை இதுவரைக்கும் மூடவில்லை, அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால், பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பிள்ளைகளின் புத்தகப்பையில் அவர்கள் ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் படமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படமும் போட்டு அன்றைக்கு மாணவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். அதில் நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் சிறிது மீதம் வந்திருந்தது. அந்த நேரத்தில் அரசு அதிகாரிகளெல்லாம் என்னிடத்தில் வந்து கேட்டார்கள், இதை மாற்றி விடலாம்.
ஏனென்றால், ஏற்கனவே இருந்த முதலமைச்சர் படம் இருக்கிறது, எனவே உங்கள் படத்தை போடுகிறோம் என்று சொன்னார்கள். யார் படமும் போடவேண்டாம், இருப்பது அப்படியே இருக்கட்டும். இதை மாற்றினீர்கள் என்றால், பல கோடி ரூபாய் இழப்பு வரும், அந்த இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது, எனவே அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவன்தான் நான்.
எனவே இதையெல்லாம், இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!