Tamilnadu
பைக்கில் செல்லும்போது குறுக்கே வந்த மாடு: விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மகன் -பெற்றோர் செய்த நெகிழ்ச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாக்கோயில் அருகே அமைந்துள்ள சமத்துவபுரத்தை சோ்ந்தவர்கள் பழனிவேல் - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு முகேஷ் என்ற 26 வயதில் மகன் ஒருவர் உள்ளார். படித்து முடித்து விட்டு தற்போது புகைப்பட கலைஞராக இவர் பணியாற்றி வருகிறார். இதனால் அடிக்கடி இவர் வெளியூர் செல்வது வழக்கம்.
இந்த சூழலில் கடந்த மே மாதம் 4-ம் தேதி அதிகாலை நேரத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய முகேஷ் கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். சாலையில் இரத்த காயங்களுடன் கீழே கிடந்த முகேஷை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக இளைஞரின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்து போன குடும்பத்தினர், தனது மகன் இல்லை என்றாலும், அவர் மூலம் யாராவது வாழட்டும் என்று எண்ணி, முகேஷின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
பின்னர் இளைஞர் முகேஷின் உடல் உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், கணையம் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவை படுவோரின் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து, தஞ்சையிலிருந்து கொண்டுவரப்பட்ட முகேஷின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
விபத்தில் சிக்க மூளைச்சாவடைந்த தங்கள் மகனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதே போல் சென்னையில் பட்டம் பிடிக்க முயன்ற போது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் உடலை பெற்றோர்கள் தானமாக வழங்கியுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!